

புனர்பூசம் 7-வது நட்சத்திரம். இதன் அதிபதி குருவாகும். இது உடைபட்ட நட்சத்திரம். இதன் முதல் 3 பாதங்கள் மிதுன ராசியிலும் 4ம் பாதம் கடக ராசியிலும் உள்ளது. படிப்பில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் இந்த நட்சத்திர நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டைக்கு அருகில் உள்ள சிவலப்பேரி எனும் சிற்றூரில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கையை வழிபட்டால் நிச்சயம் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அதே போல் ஜென்ம நட்சத்திர நாளில் கும்பகோணம் கும்பேஸ்வரர் அல்லது ஸ்ரீ ரங்கநாதரை வழிபட கை ராசி மருத்துவராவார்கள்.
புனர் பூசம் உடல் உறுப்பில் கைப் பகுதியை குறிக்கும் மிதுன ராசியில் அமைந்துள்ளது. புனர் பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு என்பதாலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மகான்களிடம் ஆசி பெற்றால் வாழ்க்கை வளமாகும்.
27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சனியாகும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குரு பகவான். இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் பொதுஜன வசியம் ஏற்படும். ஆன்மீக குருக்களை முதன் முதலாக சந்திக்கச் செல்லும் போது பூசம் நட்சத்திரம் நாளில் செல்லலாம். வாஸ்து சாந்தி பரிகாரம் செய்வதற்கும் வித்யா ரம்பம் செய்வதற்கும் பூசம் ஏற்ற நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவையறிந்து உதவ வாழ்வியல் மாற்றம் ஏற்படும்.
27 நட்சத்திரங்களில் ஆயில்யம் ஒன்பதாவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் நீச்சம் அடையும் கிரகம் செவ்வாய். இதில் நீச்சமடையும் கிரகம் செவ்வாய் என்பதால் எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்களை வீழ்த்த ஏற்ற நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். சத்ரு உபாதை கடன் தொல்லைகளால் துன்பப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் ராமேஸ்வரம் சென்று சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை வழிபட சத்ரு பாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கொலை பாவம் செய்தவர்கள் இந்த நட்சத்திர நாளில் சேது சமுத்திரத்தில் நீராடி ராமேஸ்வரரை மனதாரப் பிரார்த்தித்தால் பிரம்மஹத்தி தோஷம் போன்ற கொடூரமான பாவத்திலிருந்து மீள முடியும். நவகிரக சாந்தி செய்ய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தேவிபட்டினம் சென்று கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்களை வழிபட நவகிரங்களால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும். திருமணத் தடையை சந்திக்கும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று நவகிரக சாந்தி செய்தால் திருமண தடை அகலும். ஜாதகத்தில் நாக தோஷம் சர்ப தோஷம் உள்ளவர்கள் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் தேவிபட்டினம் சென்று வரலாம்.
இந்த நட்சத்திரத்தின் தோற்றம் சர்ப்பம். இதில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் இரண்டு சர்ப்பங்கள் பிணைந்த சர்ப்ப சிலைகளை வழிபட பெயர், புகழுடன் வாழலாம்.
27 நட்சத்திரங்களில் மகம் 10 வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி கேது. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுக்கிரன். கால புருஷ லக்னமான மேஷத்திற்கு ஐந்தாம் வீடு சிம்மம் ஆகும். இது புத்திர ஸ்தானம் எனப்படும். இது கேதுவின் நட்சத்திரம் என்பதாலும் கால புருஷ லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ள நட்சத்திரம் என்பதாலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகம் நட்சத்திரத்தன்று விரதம் இருந்து பிள்ளை யார்பட்டிக்கு சென்று விநாயகரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். கிணறு வெட்ட வாய்க்கால் தோண்ட சிறப்பான நட்சத்திரம் ஆகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிவ வழிபாடு செய்து வர பிரகாசமான வாழ்க்கை அமையும்.
27 நட்சத்திரங்களில் பூரம் 11வது நட்சத்திரம் ஆகும். இதன் அதிபதி சுக்கிரன் இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள் தான் விரும்பிய பெருமாளை காதல் திருமணம் செய்து கொண்டாள். இந்த நட்சத்திரம் வரும் நாளில் பெருமாளை வழிபட காதல் வெற்றி பெறும். விரும்பியவரை வாழ்க்கைத் துணையாக அடையலாம் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று பெருமாளை வணங்கினால் நல்ல மணவாளன் அமைவான். இந்த நட்சத்திரம் கால புருஷ 5ம் வீடான சிம்ம ராசியில் இருப்பதால் குழந்தை பேறு இல்லாதவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் மங்களப் பொருட்கள் தானம் வழங்க காரிய சித்தி உண்டாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.
உத்திரம் 12-வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2,3,4ம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் விரதம் இருந்து மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு நீங்கும். உத்திர நட்சத்திரம் வரும் நாளில் சங்கரன்கோவில் சென்று சங்கரநாராயணரை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், பேனா வழங்கவும், கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.
அஸ்தம் என்றால் கை என்று பொருளாகும் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஐந்து நட்சத்திரங்கள் கை போல் வானத்தில் காட்சியளிப்பதால் இதற்கு அஸ்தம் என்ற பெயர் வந்தது. இதன் அதிபதி சந்திரன் ஆகும். இதன் அதிதேவதை சாஸ்தா. இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம். இந்த நட்சத்திரத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டால் அறிவுக்கூர்மை, சாமர்த்தியம், புத்திசாலித்தனம், ஞாபக சக்தி கூடும். ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருப்பவர்கள் இந்த நட்சத்திர நாளில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் அறிவுக்கூர்மை அதிகரிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கன்னியகுமரி அம்மனையும் இதற்கு அருகில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியும் வழிபட வாழ்க்கை வளமாகும். இவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சப்த கன்னிகளை வழிபட மேன்மை கூடும்.
சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இது கன்னி, துலாம் ராசியில் அமைந்துள்ளது. இதன் முதல் 2 பாதம் கன்னி ராசியிலும் 3, 4ம் பாதங்கள் துலாம் ராசியிலும் உள்ளது. இது சுக்கிரன் மற்றும் சூரியன் நீச்சம் பெறும் ராசியில் அமைத்திருக்கும் நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகனையும் வள்ளியையும் வழிபட்டால் காதல் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டு திருமணத்தில் முடியும் காதலுக்கு எதிரான எதிர்ப்புகள் நீங்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, நிம்மதி பெருகும்.
சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசி அதிபதி சுக்கிரன். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இதில் உச்சம் அடையும் கிரகம் சனி பகவான். நீச்சம் அடையும் கிரகம் சூரியன் இதன் அதி தேவதை வாயு. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால் என்பதாலும் கால புருஷனுக்கு ஏழாம் வீட்டில் அமைந்துள்ளதாலும் பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்கள் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் கருத்தரிப்பு ஏற்படும்.
இந்த நட்சத்திரம் நாளில் திருவாலங்காட்டிற்கு சென்று சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம், புத்திர தோஷம், அபிச்சார தோஷம் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது நல்லது.
இதன் அதிபதி குருவாகும் இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். இதில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். இதன் முதல் மூன்று பகுதி துலாம் ராசியிலும் நான்காம் பகுதி விருச்சக ராசியிலும் அமைந்துள்ளது. பெண்கள் செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்தால் தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். கருத்து வேறுபாடு நீங்கும். வெள்ளிக்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் ஆண்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் திருமணத் தடை அகலும். மனைவி அன்பாக பேசுவாள்.
இந்த நட்சத்திர நாளில் திருச்செந்தூர் முருகனை வழிபட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணத் தடைகள் அகலும். நினைத்த, விரும்பிய நல்ல வாழ்க்கைத் துணை அமையும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.
27 நட்சத்திரங்களில் 17வது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. கால புருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சகம் எட்டாவது வீடாகும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் உள்ள மகாலட்சுமியை வழிபட செல்வச் செழிப்பு மிகுதியாகும்.
நம்முடன் வாழ்ந்து மறைந்த மகான் ஸ்ரீ காஞ்சி மகானை அனுசம் நட்சத்திரத்தில் வழிபட்டால் பிறவிப் பயன் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்
தொடரும்...
மீதம் உள்ள நட்சத்திரங்களுக்கான பலனை அடுத்த வாரம் பார்க்கலாம்.