ஆடி மாதமும்... அம்மன் வழிபாடும்

ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனில் ஐக்கியமாவதாக ஐதீகம்.
அம்மன்
Published on

அம்மன் வழிபாடு

தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள். வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அதிகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான்.

ஆடி மாதம்

தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கமாக ஆடி மாதம் விளங்குகிறது. தட்சிணாயன புண்ய காலம் என்பது பூஜை, தவம், பிரார்த்தனை போன்றவற்றுக்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக, சூரியனை ஆணின் அம்சம் என்றும், சந்திரனை பெண்ணின் அம்சம் என்றும் ஜோதிடம் குறிப்பிடும்.

ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனில் ஐக்கியமாவதாக ஐதீகம். அதாவது, பெண் எனும் பெரும் குளிர்ச்சியில் ஆண் எனும் கடும் வெம்மை அடங்குவதால்தான் இந்த மாதம் குளிர்ச்சியாக விளங்குவதாகக் கூறுகின்றன ஞான நூல்கள். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. இந்த மாதத்தில் மண்ணில் விதைக்கப்படும் எந்த விதையும் முளைத்து செழிக்க ஆரம்பிக்கும். அதேபோல், ஆடி மாதத்தில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் தங்கு தடையின்றி ஓங்கி வளரும் என்பது ஐதீகம். மனிதத் தோற்றத்துக்கு அடிப்படை பெண்மை அல்லவா? அதனால்தான் பெண்களுக்கு மிக உகந்த காலமாக ஆடி மாதம் விளங்குகிறது என்கின்றனர்.

நதிகள்

ஆடி மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது பெரும் நற்பலன்களைப் பெற்றுத் தருவதாகத் திகழ்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனித நதிகளில் நீராட இயலவில்லை என்றாலும் உங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளம், ஆறு போன்றவற்றிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட, ‘கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ எனும் சுலோகத்தைச் சொல்லி விட்டுக் குளிக்க, புனித நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

இதனால் நீங்கள் செய்த முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகுவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தில் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது என்பது மாங்கல்ய பலத்தைக் கூட்டுவதாகும். அதனால்தான், ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி; அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி’ எனும் சொல் வழக்கே வந்தது. பெண்கள் தங்களின் மாங்கல்ய பலம் கூடுவதற்கும் கணவன் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஆடி மாதத்தில் அவ்வை நோன்பு மேற்கொள்ளும் வழக்கமும் தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

மழை

‘மாரி’ என்றால் மழை என்றும் ஒரு பொருள் உண்டு. மண்ணுலக செழிப்புக்கு மழை எவ்வளவு அவசியமோ, அதேபோல் பெண்கள் வாழ்க்கை சிறப்படைய மாரியம்மனின் அருள்மழை அவசியமாகிறது. அருளைப் பொழியும் அன்னையாம் மாரியம்மனை வழிபட மிக உகந்த காலமாக விளங்குகிறது ஆடி மாதம்.

அம்பிகை வழிபாடு

அன்னை சக்தியின் அம்சமான பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் மாதம் ஆடிமாதம். அம்பிகையின் கடுந்தவ பக்தியில் உளம் கனிந்து காட்சி தந்த சிவபெருமான், ஆடி மாதம் அம்மன் மாதமாகவே விளங்கும்படியும், இம்மாதத்தில் சிவமாகிய தாம், சக்திக்குள் அடங்குவதாக வரம் தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ‘ஆடிக்காற்றில் அம்மியும் அசையும்’ என்று கூறுவர். அம்மிக்கல் போன்று இருக்கமான மனம் கொண்டோரையும் அம்பிகை வழிபாடு எனும் அருட்காற்று அசைத்துப் பார்க்கும் என்று அருளாளர்கள் பொருள் கூறுகின்றனர்.

கூழ் வார்த்தல்

மாரிக்காலத்தின் துவக்கமான ஆடிக் காற்று, உலக உயிர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளையும் தோற்றுவிக்கும் மாதமாக இருப்பதால் அதில் இருந்து தப்புவிக்க பல்வேறு அம்மன் வழிபாடுகளை உருவாக்கி வைத்துச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். கூழ் வார்த்தல், துள்ளு மாவு படைத்தல், பொங்கல் வைத்தல் போன்ற அம்மன் வழிபாடுகள் அனைத்தும் நம் மனதை மகிழ்விப்பதோடு, உடலையும் உறுதிப்படுத்துவதாகத் திகழ்கின்றன. இந்த மாதத்தில் பெண்களின் கூந்தலில் பல்வேறு பூக்களோடு, அம்மனின் அருமருந்தான வேப்பிலை கொழுந்தும் சேர்ந்து மணப்பதைக் காணலாம்.

வெள்ளிக்கிழமை

ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அம்பாளை வணங்கிக் கொண்டாட அற்புத நாட்களாகும். வீட்டில் குடும்பப் பெண்களோ அல்லது கன்னிப் பெண்களோ இறந்து விட்டால், அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் படையல் போட்டு வணங்க, அவர்களின் மனம் குளிர்ந்து நமக்கு நன்மை செய்வார்கள் என்பது ஐதீகம். அதோடு, புடவை, ரவிக்கை துணி, வளையல், குங்குமம், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் வைத்துப் படைத்து, அதை ஏழைப் பெண்களுக்கு தானம் தர, அவர்களின் மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். இதனால் குடும்பத்தின் தரித்திரம் ஒழியும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். நோய், நொடிகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com