மலைக்கோட்டை பிள்ளையாருக்கு 60 கிலோ கொழுக்கட்டை படையல்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்-மாணிக்க விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை படையல் வைத்து வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விழா களை இழந்து காணப்பட்டது.
உச்சிப்பிள்ளையாருக்கு படைப்பதற்காக கொழுக்கட்டை எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.
உச்சிப்பிள்ளையாருக்கு படைப்பதற்காக கொழுக்கட்டை எடுத்துச்செல்லப்பட்ட காட்சி.
Published on

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புகழ் பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மலையின் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு தலா 30 கிலோ எடையிலான 60 கிலோ கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு இந்த கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது. இதேபோல, காலை 10.15 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையலிடப்பட்டது.

வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவன்று அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றனர். இதனால், பக்தர்கள் இன்றி விழா களை இழந்து காணப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உற்சவர் திருக்குளம் கரையில் எழுந்தருளி அங்கு அங்குச தேவருக்கு திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடைபெற்று, காலை 9.20 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. கோவிலில் மதியம் மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் தயாரான ‘மெகா’ கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு காரணமாக முக்குறுணி விநாயகருக்கு பெரிய கொழுக்கட்டை படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை இணையதளம், கோவில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com