மலைக்கோட்டை திருவிழா: இறைவன் தாயுமானவராக மாறி, செட்டிப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நிகழ்ச்சி

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி இறைவன் தாயுமானவராக மாறி செட்டிப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் மட்டுவார் குழலம்மையுடன் தாயுமானசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
சிறப்பு அலங்காரத்தில் மட்டுவார் குழலம்மையுடன் தாயுமானசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
Published on

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு இறைவன் தாயுமானவராக மாறி பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நேற்று நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது.

தென் கயிலாயம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்றது என்ற பெருமைக்குரிய மலைக்கோட்டை கோவில் திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்ற திருத்தலமாகும். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலுக்கு சுகப்பிரசவ பிரார்த்தனை தலம் என்ற பெருமையும் உண்டு.

இதற்கு, தன்மீது பக்தி கொண்ட ரத்தினாவதி என்ற செட்டிப்பெண்ணுக்கு ஆபத்தான கால கட்டத்தில் இறைவனே அவளது அன்னையாக மாறி சுகப்பிரசவம் நடைபெற உதவி செய்தார் என்ற ஐதீகமே காரணமாகும்.


திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி இறைவன் தாயுமானவராக மாறி செட்டிப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நிகழ்ச்சி நடத்தப்பட்ட போது எடுத்த படம்.

முன்னொரு காலத்தில் மலைக்கோட்டை பகுதியில் வணிக குடும்பத்தை சேர்ந்த பெண் ரத்தினாவதி கர்ப்பிணியாக இருந்தபோது அவளது தாயார் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உரிய நேரத்தில் மகளின் பிரசவத்திற்கு வந்து சேர முடியவில்லை. ஆனால் அனுதினமும் அவள் வணங்கி வந்த இறைவன் தனது பக்தையின் நிலை அறிந்து அவளது தாயாக மாறி சுகப்பிரசவம் நடந்தேற உதவினார்.

காவிரியில் வெள்ளம் வடிந்த பின்னர் செட்டிப்பெண் ரத்தினாவதியின் உண்மையான தாய் வந்து சேர்ந்த போது இறைவனான சிவபெருமானே தனக்கு தாயாக மாறி சேவை செய்ததை ரத்தினாவதி உணர்கிறாள். அப்போது இறைவன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்து மறைகிறார். அன்று முதல் இக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவன் தாயுமானவர் என்ற பெயருக்கு காரணமாகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தி காட்டினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு சுக பிரசவ மருந்து , பீஜாதானம் (வரதானம் நெல்) வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் மட்டுவார் குழலம்மையுடன் தாயுமானசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com