சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி நடந்தது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி
Published on

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி நேற்று மாலையில் நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவபெருமான்-கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்ததையும், அதை காண்பதற்காக திரண்டு இருந்த பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சங்கரநாராயண சுவாமி).

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு விஷ்ணு வேறுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு கயிலை மலையில் பரமசிவனிடம் சிவபெருமானே தாங்கள் நாராயணமூர்த்தியுடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டியருள வேண்டும் என்று உமையம்மை வேண்டினார்.

அதற்கு இணங்கி சிவபெருமான் அம்மையை நோக்கி பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் உள்ள புன்னைவன தலமாகிய சங்கரநயினார்கோவில் என்னும் பதியில் தவம் செய்து நீ விரும்பியபடி காண்பாயாக என்று அருளினார். அதன்படி ஆடி மாதம் உத்திராட நாளில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தருளினார். இத்தகைய அரிய காட்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு கும்பம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு கோமதி அம்மாள் தங்க சப்பரத்தில் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். 6.30 மணிக்கு சுவாமி, கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக தபசு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7 மணிக்கு சுவாமி- அம்மாள் கோவிலுக்கு எழுந்தருளினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com