ஆரன்முளா கோவிலில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இதனையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.
ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்ட போது எடுத்த ப
ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்ட போது எடுத்த ப
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அன்றைய தினம், திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்ப சாமிக்கு அணிவிப்பது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது சாமியே, சரணம் ஐயப்பா என்று பக்தர்கள் விண்ணதிரும் வகையில் கோஷம் எழுப்பினர்.

தங்க அங்கி ஊர்வலம் கொண்டு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தங்க அங்கி 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கி பேடகத்தை சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள்.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மறுநாள் 27-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 10 மணி முதல் 11.40 வரையிலான கும்ப ராசி வேளையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com