சபரிமலையில் விஷூ பண்டிகைக்காக ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 19-ந்தேதி வரை படி பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் 10 நாட்கள் நடைபெறும்.
சபரிமலையில் விஷூ பண்டிகைக்காக ஐயப்பன் கோவில் நடை திறப்பு
Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் (தமிழ்/ மலையாளம்) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உட்பட சிறப்பு நாட்களிலும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். நேற்று இரவு மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை திறப்பதையொட்டி, சபரிமலை, பம்பை, நிலக்கல், இலவுங்கல் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள், மாற்று பஸ்களில் கொண்டுவரப்படுவார்கள். தனியார் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க் செய்ய நிலக்கல்லில் விசாலமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ந் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com