

மகாபாரதத்தில் நீதி நெறிக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர், பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். தர்மரின் நேர்மை, தர்ம நெறியை சோதிக்க பல நிகழ்வுகள் நடந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
ஒரு காட்டில் ஓர் அதிசய உயிரினம் வாழ்ந்து வந்தது. அதன் மேல்பகுதி மனித வடிவமாகவும், கீழ்பகுதி சிங்க வடிவமாகவும் இருந்தது. அதன் பெயர் 'புருஷாமிருகம்'. தீவிர சிவ பக்தரான புருஷாமிருகம், அந்த காட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
ஒரு சமயம் நாரதரின் அறிவுரைபடி, தர்மர் ராஜசூய யாகம் நடத்த திட்டமிட்டார். அந்த காலத்தில் யாக சாலையில் புருஷாமிருகத்தை உலா வர செய்வார்கள். இதன் காரணமாக தர்மர், பீமனிடம் புருஷாமிருகத்தை அழைத்துவர கட்டளை இட்டார். பீமனும் காட்டிற்குள் சென்று, புருஷாமிருகத்தை அழைத்தான். அதற்கு புருஷாமிருகம் ஒரு நிபந்தனை விதித்தது. “நீ எனக்கு முன்பாக செல்ல வேண்டும். உன்னை தொடர்ந்து நான் வருகிறேன். ஆனால் உன்னை நான் நெருங்கிவிட்டால் உன்னை சாப்பிட்டு விடுவேன்” என்றது.
பீமனும் அதற்கு ஒப்புக்கொண்டு, முன்னால் வேகமாக ஓடினான். புருஷாமிருகமும் வேகமாக பீமனை பின்தொடர்ந்தது. புருஷாமிருகம் சிறந்த சிவபக்தன் என்பதால், எங்கு சிவலிங்கத்தை பார்த்தாலும் உடனே சிவபூஜை செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த பீமன், தன்னை நெருங்கி வரும் வேளையில் ஒரு சிவ லிங்கத்தை வைத்துவிட்டு ஓடினான். புருஷாமிருகம் சிவலிங்கத்தை பார்த்ததும், சிவ பூஜை செய்துவிட்டு பின்னர் பீமனை துரத்தியது.
இவ்வாறு புருஷாமிருகம் பீமனை நெருங்கியதும், பீமன் சிவலிங்கத்தை வைப்பதும், புருஷாமிருகம் அதற்கு சிவபூஜை செய்துவிட்டு துரத்துவதுமாக இருந்தது. ஆனால் பீமன் அரண்மனையை நெருங்கியதும், அவனது ஒரு காலை புருஷாமிருகம் பிடித்து விட்டது. அப்போது, பீமனின் ஒரு கால் காட்டிற்குள்ளேயும், மறு கால் வெளியேயும் இருந்தது.
புருஷாமிருகம், “நான் உன்னை பிடித்துவிட்டேன். இனி உன்னை உணவாக சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு பீமன், “நான் ஒரு காலை காட்டிற்கு வெளியே வைத்துவிட்டேன்” என்று மறுத்து வாதாடினான். இறுதியில் இருவரும், தர்ம நெறி தவறாத தர்மரிடம் நியாயம் கேட்க முடிவு செய்தனர். அதன்படி தர்மரிடம் சென்று, நடந்தவற்றை கூறினர்.
பொறுமையாக கேட்ட தர்மர், "பீமா! உன்னுடைய ஒரு கால், புருஷாமிருகத்தின் எல்லைக்குள் இருக்கும் போதே, அது உன்னை பிடித்துவிட்டதால், உன் உடலின் பாதியை புருஷாமிருகத்திடம் கொடுத்துவிட வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார். சொந்த தம்பியாக இருந்தாலும், ஒரு பக்கமாக தீர்ப்பு வழங்காமல் தர்ம நெறிபடி நடந்துகொண்டதை பார்த்து புருஷாமிருகம் தர்மரை பாராட்டியது.
அப்போது சாஸ்திரங்களில் சிறந்தவனான சகா தேவன், “அண்ணா! நீதி தவறாமல் தீர்ப்பு அளித்தீர்கள். ஆனால் இதை எவ்வாறு நிறைவேற்ற முடியும்” என்று கேட்டான். அதற்கு தர்மர், “இந்த தீர்ப்பை எப்படி நிறைவேற்றுவது என்று சகல கலைகளிலும் வல்லவனான உனக்கு தெரியும் அல்லவா. அதனால் நீயே சொல்” என்றார். சகாதேவன், "பீமனின் ஒரு பாதியை புருஷாமிருகம் உண்ணும்போது, மறுபாதியில் எந்த ரணமோ, வலியோ ஏற்படக்கூடாது. அந்த வகையில் புருஷாமிருகம் பீமனின் ஒரு பாதியை உண்ணட்டும்” என்றான்.
உடனே புருஷாமிருகம் தர்மரை நோக்கி, “அரசே! நான் அறக்கடவுள். உங்களின் அற நீதியை சோதிப்பதற்காகவே இப்படி ஒரு நிகழ்வை நடத்தினேன். இந்த சோதனையில் வெற்றி பெற்றுவிட்டீர்” என்றது. மேலும், பீமன், தன் வலிமையால் என்ன கொல்ல முயன்றிருக்கலாம். ஆனால் அறத்துக்கு கட்டுப்பட்டு தண்டனை பெற முன்வந்தான். சகாதேவன், தான் கற்ற கலைத்திறனால் அற நுணுக்கத்தை உணர்த்தினான் என்று பாராட்டிவிட்டு சென்றது.
இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுகொள்வது என்னவென்றால் எந்த சூழ்நிலையிலும் உண்மையையும், நீதியையும் கைவிடக்கூடாது. தர்மர், தன் சொந்த சகோதரர் என்றும் பாராமல் நியாயமான தீர்ப்பு வழங்கினார். அதனால் புருஷாமிருகம், தர்மரின் நேர்மையை மதித்து தலைவணங்கியது. நீதியும், நேர்மையும் இருந்தால் இறுதியில் வெற்றி நிச்சயம். அவையே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.