

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய யானை நமச்சிவாயம் ஆன்மீக பணியை தொடங்கி, பிரதோஷ விழாவில் பக்தர்களுடன் வலம் வந்து அனைவரையும் கவர்ந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த யானை ருக்கு இறந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதான ஆண் யானை கொண்டு வரப்பட்டது.
இதற்கு நமச்சிவாயம் என பெயரிடப்பட்டது.
இந்த யானைக்கு பாகன்கள் பயிற்சி அளித்து வந்த நிலையில் நேற்று முதல் யானை நமச்சிவாயம் தனது ஆன்மீக பணியை தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷ விழாவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருள யானை நமசிவாயம் பக்தர்களோடு பிரதோஷ நாயகருக்கு முன்பாக வலம் வந்தது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அருணாசலேஸ்வரர் கோவிலில் யானை இல்லாத நிலையில் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா 10 நாள் உற்சவத்தில் சாமி மாட வீதி உலா வரும்போது யானை நமச்சிவாயம் சாமிக்கு முன்பாக வலம் வரும் என கூறப்படுகிறது.
சாமி மாட வீதி உலா வருவதற்கு முன்பாக யானை அசைந்தாடிய படி வரும் காட்சி பக்தர்களை பரவசப்படுத்துவது மட்டும் இன்றி சிறுவர் மற்றும் சிறுமிகளை உற்சாகப்படுத்தும்.