

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், தங்க மயில் வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல், வைர கிரீடம் மற்றும் சேவல் கொடி சாற்றப்பட்டு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று அதிகாலை உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார்.
இதையடுத்து காலை தேரோட்டம் தொடங்கியது. திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகளில் வலம் வந்த தேரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலதீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றுவதற்காக 70 கிலோ எடையுள்ள, 400 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட பிரமாண்ட தாமிர கொப்பரை மலை உச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 150 மீட்டர் காடா துணி திரி மற்றும் 5 கிலோ கற்பூரம் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரம் தொடர்பான பரபரப்பான சூழ்நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் மலை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை பொருட்படுத்தாமல் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கிரிவலம செல்வதையும் காண முடிந்தது. பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
மலை பாதைகளில் மட்டும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மற்ற இடங்களில் பொதுமக்கள் வழக்கமாக செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.