சிவமொக்கா தசரா விழா: வெள்ளி அம்பாரியில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மன்

சிவமொக்கா தசரா விழாவையொட்டி நேற்று ஜம்புசவாரி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெள்ளி அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார்.
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் வெள்ளி அம்பாரியை யானை சுமந்து கொண்டு வந்தபோது எடுத்தபடம்.
சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் வெள்ளி அம்பாரியை யானை சுமந்து கொண்டு வந்தபோது எடுத்தபடம்.
Published on

மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ்பெற்றது. அதேபோன்று மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. சிவமொக்காவிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தசரா விழா கொண்டாடப் படுகிறது. நவராத்திரியையொட்டி சிவமொக்காவில் கடந்த மாதம் (29-ந்தேதி) தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிவமொக்காவில் விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வந்தது.

இந்த நிலையில் தசரா விழாவின் கடைசி நாளான நேற்று ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெற்றது. கோட்டை சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு இந்த ஊர்வலம் புறப்பட்டது. சாகர் யானை மேல் இருந்த வெள்ளி அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். இந்த ஊர்வலத்தை சிவமொக்கா மாநகராட்சி மேயர் லதா கணேஷ், துணை மேயர் சன்னபசப்பா, கலெக்டர் சிவக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சாந்தராஜ் ஆகியோர் மலர் தூவி தொடங்கி வைத்தனர். சாகர் யானை, 2 யானைகளின் புடைசூழ கம்பீரமாக நடைபோட்டு சென்றது.

இந்த ஊர்வலம் சிவமொக்கா கோட்டை சிவப்ப நாயக்கா அரண்மனையில் இருந்து கோட்டை சாலை, ராமண்ணா ஷெட்டி பூங்கா, காந்தி பஜார், நேரு வீதி, ஜெயில் சாலை வழியாக மாலை 6 மணிக்கு பழைய சிறைச்சாலை மைதானத்தில் உள்ள பன்னி மண்டபத்துக்கு வந்தடைந்தது. யானைகளுக்கு முன்பாக கலை குழுவினரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ஊர்வலத்தை கண்டுகளித்தனர்.

இந்த ஊர்வலத்துடன், நகரில் உள்ள பல கோவில்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் சாமி சிலைகள் பன்னி மண்டப மைதானத்துக்கு வந்தது. இதையடுத்து மாலை 6.15 மணி அளவில் பன்னி மண்டப மைதானத்தில் வைத்து சிவமொக்கா தாசில்தார் பி.என்.கிரீஷ் பன்னி மரத்தை வெட்டினார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பன்னிமரத்தை தாசில்தார் வெட்டியதுடன் சிவமொக்கா தசரா விழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com