

பஞ்சபூத தலங்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியே அமைந்திருக்கின்றன. அவை சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவில் (மண்), கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில் (நெருப்பு), தென்மலை திரிபுரநாத சுவாமி கோவில் (காற்று), தாருகாபுரம் மத்தியஸ்தநாத சுவாமி கோவில் (நீர்), விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் (ஆகாயம்) ஆகும்.
சங்கரன்கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் முதல் தலம் இதுவே ஆகும். இந்த கோவிலை மண் தலம் என்று அழைக்கிறார்கள். சங்கரன்கோவில் சிவ பெருமானுக்கு சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய பெயர்கள் உண்டு. இந்த கோவிலின் தல மரம் புன்னை மரமாகும்.
சோழநாட்டில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் (நெருப்பு), காளகஸ்தி காளத்தீஸ்வரர் கோவில் (காற்று), காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் (நிலம்), சிதம்பரம் நடராஜர் கோவில் (ஆகாயம்) ஆகிய புகழ்பெற்ற பஞ்ச தலங்கள் அமைந்துள்ளன. ஆனால் சோழ நாட்டில் உள்ள பஞ்ச பூத தலங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளது.
ஒவ்வொரு கோவிலுக்கான தூரமும் அதிகம். இதனால் மகாசிவராத்திரி அன்று ஒரே நாள் இரவில் இந்த 5 தலங்களுக்கும் பக்தர்கள் சென்று வழிபட முடியாது. ஆனால் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்கள் அருகருகேயே உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்குமான இடைவெளி சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவாகவே இருக்கிறது.
இதனால் மகாசிவராத்திரி தினத்தன்று இந்த பஞ்சபூத தலங்களுக்கு ஒரே நாள் இரவில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்யலாம். அவ்வாறே பல பக்தர்கள் மகா சிவராத்திரி அன்று பாண்டிய நாட்டில் உள்ள பஞ்சபூத தலங்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.