புண்ணியம் சேர்க்கும் ஆடி அமாவாசை

நம்மில் பலரும் தர்ப்பணம் செய்ய நேரமில்லை என்று சொல்லி தவிர்க்கிறோம்.
Tharpanam
Published on

அமாவாசை என்பது நம் முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாளாகும்.

அமாவாசை

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. வருடம் முழுவதும் அமாவாசையில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், இந்த மூன்று அமாவாசைகளிலாவது தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

ஆடி அமாவாசை

அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி மாதத்தில் தெய்வ சக்திகள் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் ஆடி அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து, மன நிறைவுடன் நமக்கு ஆசீர்வாதம் வழங்கும். மேலும், அவர்களின் ஆன்மாவும் மோட்சம் அடையும்.

அமாவாசை சிறப்பு

அமாவாசை அன்று, சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இருப்பார்கள். சூரிய பகவான், நமக்கு ஆற்றல், வீரம் தரவல்லவர். சந்திரன், மனதுக்கு அதிபதியானவர். ஆடி அமாவாசையில், சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பார்கள். இதனால் ஆடி அமாவாசை மேலும் சிறப்பு பெறுகிறது.

மூன்று கடன்கள்

சாஸ்திரங்களின்படி, மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவ கடன், பித்ரு கடன், ரிஷி கடன் என மூன்று கடன்கள் உள்ளன.

தேவகடன்

தேவ கடன் என்பது இயற்கை வளங்களான நீர், காற்று, சூரியன் மற்றும் இறைசக்திக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

ரிஷி கடன்

ரிஷி கடன் என்பது ஞானம், ஆன்மிக அறம், வேதங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றை வழங்கிய முனிவர்கள் மற்றும் குருமார்களுக்கு நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.

பித்ரு கடன்

பித்ரு கடன் என்பது நம்மை பெற்றெடுத்து, வளர்த்த பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு செலுத்த வேண்டிய நன்றிக் கடனாகும். இதை, மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் தீர்க்க வேண்டும். பித்ரு கடனை அடைக்காவிட்டால் 'பித்ரு தோஷம்' உண்டாகும்.

அன்னதானம்

நம்மில் பலரும் தர்ப்பணம் செய்ய நேரமில்லை என்று சொல்லி தவிர்க்கிறோம். அதற்கு பதிலாக அன்னதானம் போன்று வேறு ஏதாவது செய்யலாம் என்கிறோம். அன்னதானம் என்பது பெரும் புண்ணியத்தை தரவல்லதுதான். ஆனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல், அதற்கு பதிலாக அன்னதானம் செய்கிறேன் என்றால் அதனால் எந்தப் பலனும் இல்லை. எனவே கட்டாயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.

சிவபெருமான் திருவடி

ஒரு சமயம் சிவபெருமானின் திருவடியை காண்பதற்காக மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்தார். வராக தோற்றத்தில் பூமியை குடைந்து சென்றபோது, மகாவிஷ்ணுவின் உடம்பில் இருந்து பூமியில் விழுந்த வியர்வை துளிகள் கருப்பு எள்ளாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தில் கருப்பு எள்ளை சேர்த்துக்கொள்வது மிகவும் புண்ணியம் தரும்.

தர்ப்பணம்

ஆடி அமாவாசை அன்று, அருகில் உள்ள புனித நீர்நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம்.

காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, தர்ப்பைப் புல், கருப்பு எள், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். முன்னோர்கள் பெயர்களை சொல்லியபடி எள் கலந்த நீரை கீழே விட வேண்டும். குறைந்தது மூன்று தலைமுறை பெயர்களையாவது சொல்வது சிறந்தது.

முன்னோர்களுக்கு படையல்

நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுக்கலாம். அன்றைய தினம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படையல் செய்து, பின்னர் காகங்களுக்கு வைக்கலாம். இதன்மூலம் நம் முன்னோர்கள் சாப்பிடுவதாக நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்குவது பல மடங்கு புண்ணியத்தை சேர்க்கும்.

ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம். வாழ்வில் துன்பங்கள் மறைந்து சுபிட்சம் உண்டாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com