

நாகை மாவட்டம், நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரிவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 470-வது ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக நாகை தொட்டிப்பந்தல் பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கண்ணாடி ரதம், பெரிய ரதம், சின்ன ரதம், செட்டிப்பல்லக்கு, கப்பல் ரதம், பீங்கான் ரதம், முத்துப்பல்லக்கு உள்பட அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டு பெரிய கடை தெரு, நீலா கீழவீதி, அண்ணா சிலை, புதிய பஸ்நிலையம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் தர்காவை வந்தடைந்தது.
அப்போது தாரை தப்பட்டை முழங்க வந்த ஊர்வலத்தை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வழிநெடுகிலும் சாதி, சமய வேறுபாடின்றி பொதுமக்கள் மலர்தூவி வழிபட்டனர். அலங்கார ரதங்களில் வந்த கொடிகளை அலங்கார வாசல் வழியாக தர்காவின் உள்புறம் உள்ள 4 மினராக்களுக்கும், அலங்கார வாசலில் உள்ள பெரிய மினராவுக்கும் ஜமாத்தார்கள் எடுத்து சென்றனர்.
அதன் பிறகு வாணவேடிக்கைகள் முழங்க தர்காவில் ஒரே நேரத்தில் இரவு 5 மினராக்களில் கொடிகள் ஏற்றப்பட்டன. அப்போது வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த மினராக்களில் கொடிகள் பறந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதனால் நாகூர் தர்கா பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 19-ந் தேதியும், சந்தனம் பூசும் நிகழ்வு 20-ந் தேதியும் நடைபெறுகிறது.
மேலும் விழாவை யொட்டி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.