

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் பெண் சித்தர் அவ்வை. அரிதாய் தோன்றிய மனித உடல் அழியக் காரணம் என்ன எனச்சிந்தித்தால். உயிர் போய்விட்டது என்கிறோம். அப்படியானால் அந்த உயிர் இத்தனை நாள் எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது. உயிர் எங்கே இருக்கிறது என நவீன விஞ்ஞானம் இதுவரை அறுதியிட்டுக் கூறவில்லை. அதைப் பற்றி அதிகம் ஆராயவும் இல்லை.
நம் சித்தர்கள் உயிரின் இருப்பிடம் குறித்து ஏதாவது கூறியிருக்கிறார்களா? எனப் பார்ப்போம். அது உண்மையா என ஆராயவும் யாராவது இனியாவது வருகிறார்களா எனப் பார்ப்போம்.
“இந்த உடலுக்கு உயிர் வந்தது எப்படி சிங்கி?- அது
தொந்தி நடுக்குழி தொப்புழ் வழியடா சிங்கா!
இந்த உடலுக்கு உயிர் எங்கே நின்றது சிங்கி? -அது
அந்தரமாயண்ட மாக்கொடி யல்லவோ சிங்கா!”
–-பீர்முகமது (ஞானக் குறவஞ்சி)
தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது அதன் தொப்புழ்க் கொடியில் உயிர் அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப் பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது போலும்.
குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து, இந்த மண்ணைத் தொட்டதும் அது அழுதே ஆகவேண்டும். இல்லையேல் மற்றவர் அழத் தொடங்குவர்.
அழுகையே பிறக்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல் காரியம். குழந்தை அழும்போது முதல் முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது. போகும் போது உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே செல்கிறது. உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று அமர்வதாக சித்தர்கள் கூறி யிருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
–- திருமந்திரம் – 309
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
– திருமந்திரம் 197
இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள். மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில் வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அங்கே வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது என யாருக்காவது தெரியுமா என்றால் அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.
“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
– திருமந்திரம் 1777
“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
– மாணிக்கவாசகர்
“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
– திருமந்திரம் 1797
“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
– சிவவாக்கியர்
இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின் நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வீடு எனக் கூறப்படுகிறது. இத்தகைய தீபச் சுடரின் வடிவத்தையே நாம் சிவலிங்கம் என்று வழிபடுகிறோம் போலும்.
இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம் எனத் தெளிவாகக் கூறுகிறார்.
“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
– திருமந்திரம் 1823-
வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின் அளவைப் பற்றி மட்டும் கூறாமலா விட்டிருப்பார்கள்..
ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால், அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின் அளவாகுமாம். இதைக் கூறியது நம் திருமூலர்தான்.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறது நூராயிர்த்தொன்றே!”
– திருமந்திரம் 2011
இவ்வாறு உயிரைப் பற்றி நம் சித்தர்கள் பலர் நீண்ட பல விளக்கங்கள் கொடுத்திருந்த போதிலும், இதுவரை சித்தர்களின் இத்தகைய கருத்துகள் இன்னும் நவீன ஆய்வுக்கு உட்படுத்தமலேயே காத்துக் கிடக்கிறது.
மனமே! ஒ! மனமே!
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.
மனம் செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாயங்கள் எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால்,
“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.
இவ்வாறு வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர்.
மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை, மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.
இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர்,
“உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை
அம்மை ஆணை உண்மையே”
வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி, வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர். மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர்.
இவ்வாறு மனத்தின் மாட்சியைப் பற்றி நம் சித்தர்கள் கண்ட பல உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.
மூச்சிலே இருக்குது சூட்சமம்!
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாமே”
இரு நாசிகள் வழியே ஏறியும் இறங்கியும் இயங்கும் காற்றினைக் கணக்காக ஆளும் திறமை கொண்டோர், எமனை அருகில் வராமல் விலக்கி வைக்கலாம் என்கிறார்கள், நம் சித்தர்கள். இதை ஏன் நாம் முக்கியமாக எடுத்து ஆராயவில்லை?
குழந்தை பிறந்ததும் எதை எதையோ சொல்லித் தரும் நாம், குழந்தைக்கு ஏன் முறையாக சுவாசிக்கச் சொல்லித் தருவதில்லை?
நமக்கே தெரிந்தால் தானே சொல்லித் தர என்கிறீர்களா? அதுவும் சரிதான். காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்கு என்று சித்தர்கள் கூறுகிறார்களே, இத்தனை பலனைத் தரும் கணக்குதான் என்ன என்று பார்க்கலாமா?
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.”
இடது மூக்கு வழியாக 16 மாத்திரை உள்ளே இழுப்பது பூரகமாகும். 64 மாத்திரை அளவு உள்ளே அடக்குதல் கும்பகமாகும். பின்னர் வலது மூக்கின் வழியாக 32 மாத்திரை வெளியிடுதல் ரேசகமாகும். இதுவே காற்றைப் பிடிக்கும் கணக்கு. ஆனால் இதை முறைப்படுத்தல், அத்தனை சுலபமல்ல. தக்க ஒரு குருவின் வழிகாட்டல் இல்லாமல் இதுவும் கைக்கூடாது. எனவே இதைத் தானே செய்ய முயலவேண்டாம்.
மருத்துவத்தின் இலக்கணம்: சித்தர்கள் கடைப்பிடித்த மருத்துவ முறை, சித்த வைத்தியம் ஆகும். சித்த வைத்தியம், வருமுன்னர் காக்கும் ஒரு அதிசய வைத்தியம். சித்தர்களின் ஒரே குறிக்கோள், இறை உணர்ந்து, இறையுடன் கலக்கும் வரை மூப்பைத் தள்ளிவைத்து, நோய் இல்லாமல், இதே உடம்பை மரணமில்லாமல் தான் விரும்பும் வரை வாழும் மார்க்கம் அறிந்து அதை மக்களுக்கு அறிவித்தவர்கள் தான் சித்தர்கள்.
மருத்துவம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தவர்கள் சித்தர்கள்.
“மறுப்பதுடல் நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பதுள நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பதினி நோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்.”
மருந்து என்பது உடல் நோயை தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது உள நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது இனி நோய் வாராது இருக்கச் செய்யவேண்டும். மருந்து என்பது சாவு வாராமல் செய்ய வேண்டும்.
எத்தனை உயர்வான மருத்துவ முறை, பாருங்கள். உடல் நோய் மட்டுமல்ல, உள நோயையும் தீர்க்க வேண்டுமாம். நோய் வந்த பின் தீர்ப்பது மட்டுமல்லாது, இனி நோய் வாராது இருக்கச் செய்ய வேண்டுமாம். மருந்துண்டால் சாவே வாராது செய்ய வேண்டுமாம்.
இத்தகைய உயர்வான மருத்துவ முறைகள் அறிந்திருந்த தமிழர் மருத்துவம், இன்று “போலி மருத்துவம்” என்று குறைகூறிச் சந்தேகிக்கப்படுகிறது. நமது சொந்த மருத்துவம், நமது நாட்டிலேயே மாற்று முறை மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது. வாழையடி வாழையாக விளங்கி வரும் சித்தர்கள் வழங்கிய அறிவியல் உண்மைகளில் சிலவற்றையாவது நாம் நவீன ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை மக்களின் பயன் பாட்டிற்குக் கொண்டுவருவதே இப்போது காலத்தின் கட்டாய மாகிவிட்டது.