ராஜேந்திர சோழனுக்கு அரசு விழாவா... நர்சுகளுக்குப் பணி நிரந்தரம் இல்லையா... - தமிழக அரசுக்கு எதிரான செவிலியர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?

2015-ஆம் ஆண்டில் மருத்துவ தேர்வாணையம் மூலம் 7,500 நர்சுகள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
நர்சுகள் போராட்டம்
நர்சுகள் போராட்டம்
Published on

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு நர்சுகளை பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி (மருத்துவ தேர்வாணையம்) நர்சுகள் நலச்சங்கம் சார்பில் சென்னயின் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனை தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அ.தி.மு.க அரசு ஆட்சிக் காலத்தின்போது, நர்சுகளுக்கு ஆதரவாக தி.மு.க குரல் கொடுத்தது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசும், செவிலியர்களை முன்பு போலவே நடத்தும் காரணத்தினால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

2015-ஆம் ஆண்டில் மருத்துவ தேர்வாணையம் மூலம் 7,500 நர்சுகள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 3,500 பேருக்கு இன்னும் ஒப்புக் கொண்டது போல பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்த நர்சுகளுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு அளிக்கப்படுவது போல எந்தவித அடிப்படை சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்த நர்சுகளுக்கு இனியும் பணி நிரந்தரம் வழங்காமல் இழுத்தடிப்பது சரியாகாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விவகாரம் குறித்து மேலும் கேட்டறிய எம்.ஆர்.பி சங்கத்தின் கவுரவ தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்டோம். அவர், "தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ஒப்பந்த நர்சுகளுக்குப் பணி நிரந்தரம் வழங்குவோம் என்று கூறியது. அதைச் செயல்படுத்தவே நாங்கள் கேட்கிறோம். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலம் முடிந்தவுடன் பணி நிரந்தரம் வழங்குவோம் என்கிறார். வெகு நாட்களாக இந்த ஒப்பந்த நர்சுகள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இனியும் கால தாமதம் செய்யக் கூடாது" என்று விளக்கினார். 

அவரிடம், "ஏற்கனவே தமிழக அரசிடம் நிதிப் பற்றாக்குறை இருக்கிறது. கொரோனா கால நெருக்கடியும் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் பணி நிரந்தரம் கோருவது சரியா. இதனால் அரசின் செலவு மேலும் அதிகரிக்காதா?" என்று கேட்டோம். அதற்கு டாக்டர் ரவீந்திரநாத், 

"அரசுக்கு ஆகும் வேறு செலவுகளைக் குறைத்துவிட்டு தற்போது இதைத்தான் முதலில் செய்ய வேண்டும். ராஜேந்திர சோழனுக்கு எதற்கு இப்போது அரசு விழா எடுக்க வேண்டும். மன்னர்களை எதற்கு தூக்கிப்பிடிக்க வேண்டும். அந்த காலத்தில் அவர்கள் நல்லாட்சி புரிந்தார்கள். அதைப் போற்றுதலாக பார்க்கலாம். அதைவிடுத்து, அவர்களுக்கு அரசு விழா எடுத்து செலவுகளை ஏன் கூட்ட வேண்டும். அப்படிப் பார்த்தால் கரிகால சோழன், குலோத்துங்க சோழன் என்கிற மன்னர்களுக்கும் அடுத்தடுத்து அரசு விழா எடுப்பார்களா. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இருக்கிறது. நர்சுகள் பிரச்சனைதான் முக்கியம். இதற்குத்தான் முக்கியத்தும் கொடுக்க வேண்டும்" என்றார் தீர்க்கமாக. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com