மீண்டும் சரித்திர சாதனைக்கு தயாராகிறது ஜிம்பாப்வே: கொழும்பு டெஸ்டில் 262 ரன்கள் முன்னிலை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே 262 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
மீண்டும் சரித்திர சாதனைக்கு தயாராகிறது ஜிம்பாப்வே: கொழும்பு டெஸ்டில் 262 ரன்கள் முன்னிலை
Published on

ஒருநாள் தொடரை முடிந்த பின்னர், தற்போது ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 14-ந்தேதி) கொழும்பில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி எர்வினின் (160) அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி உபுல் தரங்கா (71), சண்டிமல் (55), மேத்யூஸ் (41) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. குணரத்னே 24 ரன்னுடனும், ஹெரத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


ஹெரத் பந்தில் சகப்வா போல்டாகிய காட்சி

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெரத் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த லக்மல் 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி விக்கெட்டாக 45 ரன்கள் எடுத்த நிலையில் குணரத்னே அவுட் ஆக இலங்கை அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ஹெரத்

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணியை விட இலங்கை 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கமே அந்த அணிக்கு பேரடியாக இருந்தது. மசகட்சா 7 ரன்னி்லும், சகப்வா 6 ரன்னிலும், முசகண்டா ரன்ஏதும் எடுக்காமலும், எர்வின் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 23 ரன்கள் எடுப்பதற்குள் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஹெரத் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஸ்டம்பை பறிகொடுத்த வில்லியம்ஸ்

இந்த நிலையில்தான் 5-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸ் உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து 6-வது விக்கெட்டுக்கு சிகந்தர் ரசாவுடன் பீட்டர் மூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சிகந்தர் ரசா நம்பிக்கையுடன் விளையாட, மூர் அதற்கு துணையாக நின்றார்.

இருவரின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே 28.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. சிகந்தர் ரசா 62 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 145 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.

அடுத்து சிகந்தர் ரசாவுடன் மால்கம் வாலர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஹெரத்தின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது. குறிப்பாக வாலர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 200 ரன்னைத் தாண்டி வீறுநடை போட்டது. வாலர் 54 பந்தில் அரைசதம் அடித்தார். சிகந்தர் ரசா சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.


அரைசதம் அடித்து அவுட்டாகாமல் இருக்கும் வாலர்

2-வது நாள் முடியும் நேரம் வந்ததால் வாலர் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார். இருவரும் 3--வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. சிகந்தர் ரசா 97 ரன்னுடனும், வாலர் 57 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com