விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை: மும்பை தொழில் அதிபர் கைது - மனைவி எதிர்ப்பு

விமானத்தில் சென்றபோது நடிகை சாயிரா வாசிமுக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாக மும்பை தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விமானத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை:  மும்பை தொழில் அதிபர் கைது - மனைவி எதிர்ப்பு
Published on

மும்பை:

விமானத்தில் சென்றபோது நடிகை சாயிரா வாசிமுக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாக மும்பை தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமீர்கானின் ‘தங்கல்’ இந்தி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாயிரா வாசிம். இவர் கடந்த 9-ந்தேதி மும்பைக்கு விமானத்தில் சென்றபோது அவரது பின் இருக்கையில் பயணம் செய்த ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சாயிரா, தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ‘ஏர் விஸ்டாரா’ விமான நிறுவனம் உத்தரவிட்டது.

அதன்படி அந்த பயணி மீது மும்பை சாஹர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சாயிரா வாசிமிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் மும்பையை சேர்ந்த விகாஸ் சச்தேவ் (வயது 39) என்ற தொழில் அதிபர் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விகாஸ் சச்தேவ் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தையை பாதுகாத்தல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு விகாஸ் சச்தேவின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

என் கணவர் கண்ணியமானவர். பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர். எங்களுக்கு 9 வயதில் குழந்தை இருக்கிறது. விமானத்தில் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சாயிரா வாசிம் கூறியது அதிர்ச்சியளிக்கிறது.

விளம்பரத்துக்காக இந்த குற்றச்சாட்டை அவர் கூறியிருக்கிறார். பாலியல் தொல்லை நடந்து இருந்தால் விமானத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டு இருக்கலாமே. பல மணி நேரத்துக்கு பிறகு புகார் கூற காரணம் என்ன?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com