நாகர்கோவிலில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

நாகர்கோவிலில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
கைது
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச்ரோடு அருகில் உள்ள பெரியவிளையைச் சேர்ந்தவர் தனேஷ் (வயது 21). கல்லூரி மாணவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கடந்த மாதம் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் தனேஷ் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனேஷ் கடத்திச் சென்ற மாணவியை அவளுடைய வீட்டின் பக்கத்தில் விட்டு, விட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த தனேஷ் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து போலீசார் அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்த கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக மாற்றி கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் நீலாஷ்குமார் (வயது 21). இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்றதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணை திண்டுக்கல் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று 6 மாதம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முதலில் நீலாஷ்குமார் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. நீலாஷ்குமாரும், அந்தப்பெண்ணும் ஊர் திரும்பியதை அறிந்த போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் நீலாஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com