சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் 6½ பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் கைது செய்தனர்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
Published on

சென்னை:

சென்னை விருகம்பாக்கம் பாலாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் டாக்டர் சந்திரசேகர் (வயது 69). இவரது மனைவி சந்திரா (65).

இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த இவர்கள் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கோவை சென்றனர். பின்னர் கடந்த 3-ந் தேதி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தனர்.

இரவு 10 மணிக்கு விருகம்பாக்கம் செல்வதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்றனர்.

டிக்கெட் கவுண்டர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தாலிச் செயினை பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே பயணிகள் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெரியமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சந்திராவிடம் நகை பறித்தது பெரியமேடு பகுதியை சேர்ந்த முனியன் (30) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே நகை பறிப்பு வழக்குகள் உள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com