பிரார்த்தனை செய்தும் 4-வதும் பெண் குழந்தை- சாமி சிலைகளை உடைத்த வாலிபர் கைது

ஆண் வாரிசு வேண்டி பிரார்த்தனை செய்தும் 4-வதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் சாமி சிலைகளை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பிரார்த்தனை செய்தும் 4-வதும் பெண் குழந்தை- சாமி சிலைகளை உடைத்த வாலிபர் கைது
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த கோவிந்த ரெட்டிப்பாளையத்தில் இருளர் காலனியில் முனீஸ்வரன் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் நவக்கிரக சிலைகள், நாகாத்தம்மன், நந்தி சிலைகளை மர்மநபர்கள் யாரோ கோவிலின் உள்ளே புகுந்து உடைத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி சங்கர், அரியூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அரிதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாமி சிலைகளை உடைத்ததாக, அதேபகுதியைச் சேர்ந்த உலகநாதன் (வயது 32) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், தெய்வங்களிடம் வேண்டி கொண்ட பிரார்த்தனை நிறைவேறாததால் ஆத்திரத்தில் சாமி சிலைகளை உடைத்ததாக போலீசாரிடம் கூறினார். அவர் தெரிவித்த விவரங்களை போலீசார் கூறியதாவது:-

உலகநாதனுக்கு கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால், அவர் மனவேதனையில் இருந்து வந்தார். அடுத்ததாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என ஆசைப்பட்டார்.

இந்தநிலையில் உலகநாதனின் மனைவி மீண்டும் கர்ப்பமானார். பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், அங்குள்ள முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று முறையிட்டு பிரார்த்தனை செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

இதனால், அவர் மனவேதனையில் இருந்து வந்தார். தெய்வங்களிடம் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறாததால் சம்பவத்தன்று முனீஸ்வரன் கோவிலுக்குள் புகுந்து, அங்கிருந்த சாமி சிலைகளை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com