

லக்னோ:
குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி அமைப்புகள் இணைந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில், திரங்கா என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. பேரணியின் போது ஒரு தரப்பினர், கற்களை வீசியதாகச் சொல்லப்படுகிறது. பதிலுக்கு பேரணியில் ஈடுபட்டவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர் உயிரிழந்தை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மூண்டது. கடைகளை அடித்து நொறுக்கிய வன்முறைக் கும்பல், சாலையில் இருந்த பொருட்களையும் சூறையாடி தீ வைத்தனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டன.
இதையடுத்து வன்முறை நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, மேலும் வன்முறை பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கப்பட்டனர். அம்மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று கவர்னர் ராம்நாயக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அளித்த பேட்டியில், ‘ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பது அரசின் கடமை. வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அராஜகத்தில் ஈடுபடுவர்களை மன்னிக்க முடியாது’ எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையே, காஷ்கன்ச் கலவரம் தொடர்பாக மாநில அரசிடம், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. #YogiAdityanath #KasganjViolence #warnsmiscreants #UP #tamilnews