ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா
எடியூரப்பா
எடியூரப்பா
Published on

பெங்களூர்:

கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் 14 மாதங்களாக நடந்து வந்த குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது.

இதைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா மறுநாளே ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் அவசரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியை உருவாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். ஆட்சியை நீடிக்க செய்வதற்கான பெரும்பான்மை பலத்தை உறுதி செய்த பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்கலாம் என்று தெரிவித்தனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு இருப்பதாலும் அவர்கள் மீது சபாநாயகர் எத்தகைய நடவடிக்கை எடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அதன் பிறகு ஆட்சி அமைப்பது பற்றி முடிவு எடுக்கலாம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கர்நாடக மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், அரவிந்த் மதுசாமி, பசவராஜ், எடியூரப்பாவின் மகன் விஜயந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சியை பிரச்சினை இன்றி கொண்டு செல்ல முடியுமா? என்று ஆலோசிக்கப்பட்டது. மேலும் எடியூரப்பாவுக்கு 76 வயது ஆகி விட்டதால் அவரை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்யலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க தயக்கம் காட்டியதால் கர்நாடகாவில் மிக குறுகிய காலத்துக்கு மட்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. இதற்கிடையே 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா ஆட்சியை கொண்டு வருவதற்கு மேலிட தலைவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியானது. 9.30 மணி அளவில் இதை எடியூரப்பா உறுதி செய்தார்.

அவர் பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில், “நான் கவர்னரை சந்திக்க செல்கிறேன். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும். இன்றே பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரிடம் கோரிக்கை விடுப்போம்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “நான் ஏற்கனவே சட்டசபை பா.ஜ.க. தலைவராக இருக்கிறேன். எனவே மீண்டும் ஒரு தடவை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.

அதன் பிறகு எடியூரப்பா தனது வீட்டில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். 12.30 மணிக்குதான் அவர் கவர்னரை சந்திக்க அனுமதி பெற்று இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே 10.10 மணிக்கெல்லாம் அவர் கவர்னர் மாளிகைக்கு சென்று விட்டார்.

அங்கு கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து பேசினார். அப்போது குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட்ட நிலையில் தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி கடிதம் கொடுத்தார். மேலும் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் அவர் கவர்னரிடம் அளித்தார்.

அதன் பிறகு தனக்கு மெஜாரிட்டி பலம் இருப்பதால் இன்றே தனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று உரிமை கோரினார். கவர்னர் வஜுபாய் வாலா அதை ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சியை அமைத்து கொடுக்கும் பணிகளில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று எடியூரப்பா மட்டும் பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பாவும் இதை உறுதிப்படுத்தும் வகையில் மாலை 6 மணிக்கு முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநில ஆட்சி அதிகாரம் அனைத்தும் எடியூரப்பா கைவசம் வரும். அவரிடம் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட கவர்னர் கேட்டுக் கொள்வார்.

ஆனால் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான சிறிது கால அவகாசம் கேட்க எடியூரப்பா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க முடிவை இன்றே சபாநாயகர் எடுப்பார் என்று தெரிகிறது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு விரைவில் தீர்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்புகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட எடியூரப்பா முடிவு செய்துள்ளார். எனவே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நிலை என்னவாகும் என்பது தெரிந்த பிறகுதான் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி எத்தகைய நிலையை சந்திக்கும் என்பது தெரிய வரும்.

கர்நாடகாவில் வருகிற 31-ந்தேதிக்குள் நிதி மசோதா மீது விவாதம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அந்த மசோதா மீது முடிவு எடுக்காவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்பட பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் நெருக்கடி அபாயம் இருக்கிறது.

இந்த நெருக்கடியை தவிர்க்கவே பா.ஜனதா மூத்த தலைவர்கள் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் புதிய ஆட்சி அமைய சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com