கடைசி நேரத்தில் கலக்கம்- வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

கர்நாடக சட்டமன்றத்தில் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை கிடைக்காததால் வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா பதவி விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #Yeddyurappa #KarnatakaFloorTest
கடைசி நேரத்தில் கலக்கம்- வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைத்தது. எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். 15 நாட்கள் அவகாசம் பெற்று, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரது ஆதரவுடன் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜ.க. திட்டமிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டது.

அதன்படி இன்று சட்டமன்ற சிறப்பு கூட்டம்  நடைபெற்றுவருகிறது. காலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 195 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பிறகு சட்டசபை 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மற்ற எம்எல்ஏக்கள் 3.30 மணிக்கு பதவியேற்பார்கள்.

இதற்கிடையே, பா.ஜ.க.வின் இறுதிக்கட்ட குதிரை பேரம் குறித்து சர்ச்சை கிளப்பிய காங்கிரஸ், எடியூரப்பா சம்பந்தப்பட்ட ஆடியோவை வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டீலை தொடர்பு கொள்ளும் எடியூரப்பா, அவரிடம் அமைச்சர் பதவி தருவதாக பேசுகிறார்.

காங்கிரசின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்க வரவில்லை. அவர்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர்  தனது பிடியில் வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் வாக்கெடுப்பின்போது அணிமாறி வாக்களிப்பார்களா? என்ற சந்தேகம் பா.ஜ.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மெஜாரிட்டிக்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பது தெரிய வந்தால் உடனே ராஜினாமா செய்யும்படி எடியூரப்பாவுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் எடியூரப்பா ராஜினாமா செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். உறுப்பினர்கள் அனைவரும் பேரவை வளாகத்திற்குள்ளேயே மதிய உணவை சாப்பிட்டனர். மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் சாப்பிட வெளியே செல்லவில்லை.

இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை வழங்குவதறக்க, சட்டமன்றத்தில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான வேணுகோபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்தனர்.

இந்த பிரச்சனை ஒருபுறமிருக்க, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ரமேசுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தேஷ்பாண்டே திடீரென சந்தித்தார். இது பேரவை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BJP #Yeddyurappa #KarnatakaFloorTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com