

புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அமைத்தார். இந்த குழு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் சந்தித்தனர். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், வேட்பாளர் குறித்த விவரத்தை தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சீதாராம் யெச்சூரியுடன் ராஜ்நாத் சிங், வெங்கைய்யா நாயுடு ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யெச்சூரி, “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது ஒரு மக்கள் தொடர்பு சந்திப்பு போல தான். இந்த தேர்தலில் பா.ஜ.க.விடம் 31 சதவீதம் வாக்குகளும், எதிர்க்கட்சிகளிடம் 69 சதவீதம் வாக்குகளும் உள்ளது. அதனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவை கண்டிப்பாக நாட வேண்டிய தேவை அக்கட்சிக்கு உள்ளது. மேலும் பா.ஜ.க.வின் வேட்பாளர் யார்? என்பதை தெரியப்படுத்தவில்லை. வேட்பாளர் யார் என்று தெரிவித்தால்தான் நாங்கள் யோசிக்க முடியும்” என்றார்.