செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?

நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுமா என தொடர்ந்து பார்ப்போம்.
Published on

நியூ யார்க் நகரில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து செல்லப்பிராணிகளை வளர்க்கும் நெட்டிசன்கள் மத்தியில் ஓர் அச்சம் ஏற்பட துவங்கி இருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக நாய் மற்றும் பூனைகளை வளர்ப்போர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகம் என அவரவர் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில் செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

முன்னதாக செல்லப்பிராணிகளிடம் இருந்து தான் கொரோனா நோய் தொற்று பரவியதாக நினைத்து சீனாவில் செல்லப்பிராணிகள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால், செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா நோய் தொற்று பரவியதாக கூறும் தகவல்களை உலக சுகாதார மையம் ஏற்கனவே திரும்ப பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா நோய் தொற்று பரவுவதாக கூறும் தகவல்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com