

லன்டன்:
இந்தியாவில் வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்குவது மிகவும் சகஜமான ஒன்று தான். பிரபலங்கள் மட்டுமின்றி பொது மக்களும் ஃபேன்ஸி நம்பர்களை கட்டணம் செலுத்தி தங்களது வாகனங்களுக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும் வாகன பதிவு எண்களில் 8055, AK47, 786 அல்லது 0-9 வரையிலான ஒற்றை இலக்க எண்கள் மிகவும் பிரபலமானவையாகும். எவ்வாறான ஃபேன்ஸி நம்பர்களுக்கும் பயனர்கள் அதிகபட்சம் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையிலோ அல்லது உச்சக்கட்டமாக ரூ.20 லட்சம் வரை வழங்குவர்.
ஆனால் லண்டனை சேர்ந்த நபர் காரின் ஃபேன்ஸி நம்பர் விலையை இந்திய மதிப்பில் ரூ.132 கோடி என தெரிவித்துள்ளார். உயர் ரக ஆடம்பர கார்களுக்கு புதிய வடிவமைப்பு அல்லது மேலும் அழகூட்டும் பிரபல நிறுவனமான கான் டிசைன் நிறுவனர் அஃப்சல் கான் இத்தகைய விலை நிர்ணயம் செய்திருக்கிறார்.
ஃபேன்ஸி நம்பர் தவிர 4500 மாருதி சுசுகி ஆல்டோ அல்லது 10 புகாட்டி வெரான் மாடல்களை வாங்கிட முடியும். F1 என்ற நம்பர் பிளேட் பிரபல கார் பந்தையமான ஃபார்முலா 1-ஐ மட்டுமே குறி்க்கிறது. எனினும் ஒற்றை இலக்க எண் என்ற அடிப்படையில் இந்த எண் விலை அதிகரித்துள்ளது.
அஃப்சல் கான் தனக்கென பயன்படுத்தி வரும் புகாட்டி வெரான் மாடலுக்கு F1 என்ற ஃபேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார். மஞ்சள் நிற பிளேட் மத்தியில் கருப்பு நிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. 2008-ம் ஆண்டு ரூ.4 கோடி கொடுத்து கான் இந்த பிளேட்டினை வாங்கியிருந்தார்.
தற்சமயம் இதன் மதிப்பு 3200 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த பிளேட் 1904-ம் ஆண்டு முதல் எசெக்ஸ் சிட்டி கவுன்சிலில் இருந்து வருகிறது. இதன் நிர்ணயிக்கப்பட்ட விலையில் சேவை வரி சேர்க்கப்படவில்லை, அந்தவகையில் இந்த நம்பர் பிளேட் வாங்குவோர் இந்திய மதிப்பில் ரூ.22 கோடிகளை வரியாக செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.