

2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷிய எல்லைக்குள் இருக்கும் ராணுவ இலக்குகள் மீது உக்ரைன் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ரஷியாவின் வான்வெளி இனி வணிகரீதியான பயணிகள் விமானங்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரோன்கள் நிறைந்த வான்வெளியில் பயணிகள் விமானங்கள் பறப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், உக்ரைன் நேரடியாகப் பயணிகள் விமானங்களை இலக்கு வைக்கவில்லை என்றாலும், ரஷியாவின் வான்வெளி நடைமுறையில் மூடப்படும் நிலையை நோக்கிச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களுக்கு இன்னும் சேவைகளை வழங்கி வரும் சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் இந்த எச்சரிக்கைக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய புதின், பயணிகள் விமானப் போக்குவரத்தை அச்சுறுத்தும் வகையில் பேசுவது "அரசு பயங்கரவாதம்" என்று சாடினார்.
பயங்கரவாதிகளுடன் ரஷியா ஒருபோதும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாது என்று திட்டவட்டமாகக் கூறிய புதின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ரஷியப் படைகள் தீவிரமான மற்றும் பெரிய அளவிலான பதிலடித் தாக்குதல்களைத் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. இருப்பினும், சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் ஆசிய-ஐரோப்பிய வழித்தடங்களுக்காக ரஷிய வான்வெளியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
தற்போது உக்ரைனின் நீண்டதூர ட்ரோன்கள் ரஷிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருவதால், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளின் குறுக்கீடால் வணிக விமானங்கள் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என சர்வதேச விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.