

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறியப்பட்ட 'A23a', தெற்குப் பெருங்கடலின் வெப்பமான நீரினாலும் கடல் நீரோட்டங்களினாலும் உருகி, தற்போது முழுமையாக மறைந்துவிட்டது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த இதன் வரலாற்றுப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனித் தட்டிலிருந்து 1986-ஆம் ஆண்டு உடைந்து தனியாகப் பிரிந்த இந்த பனிப்பாறை, 1991-ஆம் ஆண்டில் A23a என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் இது சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இது இந்தோனேசியாவின் பாலி தீவின் அளவிற்கு அல்லது இந்தியாவின் கோவா மாநிலத்தின் பரப்பளவிற்கு நிகரானது.
பிரிந்த பிறகு, வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கியதால், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் முடங்கி இருந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டில் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் நகரத் தொடங்கி, தெற்குப் பெருங்கடலை நோக்கிப் பயணித்தது.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெப்பமான கடற்பகுதிகளை அடைந்தபோது, இந்த பனிப்பாறை வேகமாகக் கரையத் தொடங்கியது. பெரிய பனிப்பாறைகள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து சிதறின. அமெரிக்க தேசிய பனி மையம் மற்றும் நாசா ஆகியவை செயற்கைக்கோள் மூலம் இதைக் கண்காணித்து வந்த நிலையில், தற்போது A23a பனிப்பாறை முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். A23a பனிப்பாறை தனது பயணத்தின் மூலம் கடல்சார் உயிரினங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் பெருமளவில் உதவியுள்ளது.