உலக உறுப்பு தான தினம்: ஒரே ஒரு 'YES' எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்கும் உயரிய கொடை!

மருத்துவர்கள் ஒவ்வொரு உறுப்பின் நிலையையும் தனித்தனியாக ஆய்வு செய்தே தானம் பெறத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.
World Organ Donation Day
Published on

உலக உறுப்பு தான தினம் ஆண்டுதோறும் இன்று (ஆகஸ்ட் 13) அனுசரிக்கப்படுகிறது. ஒரு தனிநபரின் உறுப்பு தான முடிவு, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதயம், இரண்டு நுரையீரல்கள், கணையம் மற்றும் குடல் என எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும். இதுமட்டுமின்றி, திசு தானத்தின் மூலம் மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்குப் புதிய வாழ்க்கையை வழங்க முடியும்.

இந்தியாவில் உறுப்பு மாற்ற சிகிச்சையின் வளர்ச்சி

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் 5,000-க்கும் குறைவாக இருந்த அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 20,000-ஐத் தாண்டியுள்ளது.

இதன் மூலம் உயிருள்ள கொடையாளர்கள் மூலம் உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. இருப்பினும், உறுப்பு தேவைப்படுபவர்களுக்கும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி இன்னும் மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கிறது.

மக்களிடையே நிலவும் தவறான எண்ணங்கள்

இதற்கு மருத்துவ அமைப்புகளின் குறைபாடுகளை விட, மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகளே முதன்மையான காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்க்கரை நோய், புற்றுநோய், மூப்பு அல்லது மாரடைப்பு போன்ற மருத்துவ வரலாறுகள் இருந்தால் உறுப்பு தானம் செய்ய முடியாது என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. ஆனால், மருத்துவர்கள் ஒவ்வொரு உறுப்பின் நிலையையும் தனித்தனியாக ஆய்வு செய்தே தானம் பெறத் தகுதியானதா என்பதைத் தீர்மானிக்கின்றனர்.

மூளைச்சாவு பற்றிய தெளிவு அவசியம்

மேலும், 'மூளைச்சாவு' மற்றும் 'இதயத் துடிப்பு' குறித்த தவறான புரிதல்களும் தானத்திற்குப் பெரும் தடையாக உள்ளன. மூளைச்சாவு அடைந்த நபரின் உடலை செயற்கை சுவாசம் மூலம் பராமரிக்கும் போது இதயத் துடிப்பு இருந்தாலும், அது மூளைச்சாவு அடைந்த நிலையை மாற்றாது. மருத்துவரீதியாகவும் சட்டரீதியாகவும் மூளைச்சாவே மரணமாகக் கருதப்படுகிறது. அந்த குறுகிய காலத்தில் எடுக்கப்படும் ஒரே ஒரு சரியான முடிவு, பல உயிர்களைக் காக்கும் அமுதமாக மாறுகிறது.

குடும்பங்களின் சம்மதமும் சமூகப் பொறுப்பும்

பொதுமக்கள் உறுப்பு தானத்திற்குப் பதிவு செய்வதுடன், தங்கள் விருப்பத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அவசர காலங்களில் குடும்பத்தினரின் சம்மதமே உறுப்பு தானத்தை சாத்தியமாக்குகிறது. சட்டப்பூர்வமான விழிப்புணர்வும், குடும்பங்களுக்கிடையேயான திறந்த உரையாடலும் அதிகரிக்கும் போதே இந்த உறுப்பு தான இயக்கம் முழுமையான வெற்றியைப் பெறும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com