

அமெரிக்காவுடன் ஒப்பீடுகையில் கனடாவில் வழக்கமான ராணுவ பலம் மிகவும் குறைவு என்பதால், நேரடிப் போரில் அமெரிக்க படைகள் 2 முதல் 7 நாட்களுக்குள் கனடாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிவிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடான அமெரிக்கா ஒருவேளை கனடாவின் மீது ராணுவத் தாக்குதல் அல்லது படையெடுப்பை நிகழ்த்தினால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, கனடா நாட்டின் பிரதமரும் ராணுவப் படைகளும் ரகசியத் திட்டங்களையும் போர்ப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவின் ஆயுதப் படைகள், தனது நாட்டின் மிக முக்கிய நட்பு நாடான அமெரிக்காவையே ஒரு சாத்தியமான எதிரியாக கருதி போர் மாதிரிகளை திட்டமிட்டு மதிப்பீடு செய்து வருகின்றன.
கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா ராணுவ ரீதியாக கனடாவை ஆக்கிரமிக்கும் சாத்தியக்கூறுகள் மிகக் குறைவுதான் என்ற போதிலும், அதை "தீவிர அபாயம்" கொண்ட ஒரு நிகழ்வாக வகைப்படுத்தி கனடா அரசு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் "51வது மாநிலமாக" மாற்றுவது பற்றியும், பொருளாதார ரீதியாக நெருக்கடி தருவது பற்றியும் தொடர்ச்சியாக பேசி வரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது தங்களது முக்கியக் கடமை என்று கனடாவின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பீடுகையில் கனடாவில் வழக்கமான ராணுவ பலம் மிகவும் குறைவு என்பதால், நேரடிப் போரில் அமெரிக்க படைகள் 2 முதல் 7 நாட்களுக்குள் கனடாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிவிடும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க படைகளை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் கையாண்ட கொரில்லா முறை, ட்ரோன் தாக்குதல்கள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் சதிச்செயல்கள் போன்ற மாற்றுப் போர் முறைகளைப் பயன்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது.
சாத்தியமான இந்த அச்சுறுத்தலை சமாளிக்க, கனடா ராணுவத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜென்னி கரிக்னான் சுமார் 4,00,000 நபர்கள் கொண்ட மிகப்பெரிய தன்னார்வப் பாதுகாப்புப் படையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒருவேளை அமெரிக்க ஆக்கிரமிப்பு நேரிட்டால், நேட்டோ அமைப்பில் உள்ள பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற பிற அணுசக்தி நாடுகளின் ராணுவ உதவியை நாடவும், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு ராஜதந்திர ரீதியாக நெருக்கடி அளிக்கவும் கனடா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.