'ஐ.நா. ஒரு பயனற்ற அமைப்பு': ஐநா பொதுச்சபையில் அர்ஜென்டினா அதிபர் ஹேவியர் மிலே கடும் தாக்கு!

உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஐ.நா. இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பதாக கூறினார்.
Argentine President Javier Milei
Published on
Summary

சர்வதேச அரங்கில் அர்ஜென்டினா மேற்கத்திய நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் உறுதியாக கரங்கோர்க்கும் என ஹேவியர் மிலே தெளிவுபடுத்தினார்.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கூட்டத்தில் உரையாற்றிய அர்ஜென்டினா அதிபர் ஹேவியர் மிலே, ஐக்கிய நாடுகள் சபையை “பயனற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய சர்வதேச அமைப்பு, தனது முதன்மை பாதையிலிருந்து விலகி சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வேடமிட்ட சுயநலவாதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் குறித்து அர்ஜென்டினா அதிபர் பேசுகையில், "ஐ.நா. தற்போது நன்நோக்கம் கொண்ட அதிகாரிகளாக வேடமணிந்து உலா வரும் பேரகந்தை கொண்ட அதிகாரவர்க்கத்தினரை வளர்த்தெடுக்கும் ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" என்று சாடினார். மேலும், உலகெங்கிலும் வன்முறை, பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் தொடர்வதற்கு ஐ.நா.வின் பலவீனமான நிலைப்பாடே காரணம் என்றும், மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக ஐ.நா மெளனம் சாதிப்பதாகவும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.

.நாவின் அலட்சியம்

அர்ஜென்டினாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மாலவினாஸ் தீவுகள் இறையாண்மை பிரச்சனை குறித்து பேசிய அவர், உறுப்பு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஐ.நா. இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பதாக கூறினார். ஐ.நாவில் தீர்மானங்களுக்கும் வார்த்தைகளுக்கும் பஞ்சமில்லை என்றும், ஆனால் அவற்றால் எந்தவிதமான விளைவுகளோ அல்லது நடவடிக்கைகளோ ஏற்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிரிட்டன் உடனடி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு

தனது உரையில் சர்வதேச அரங்கில் அர்ஜென்டினா மேற்கத்திய நாடுகளுடனும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் உறுதியாக கரங்கோர்க்கும் என ஹேவியர் மிலே தெளிவுபடுத்தினார். இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்த அவர், ஈரானிய புரட்சிகரப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அர்ஜென்டினா அறிவித்துள்ளதாகவும் கூறினார். அதேவேளையில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலக சுகாதார அமைப்பு விதித்த கட்டுப்பாடுகளைத் கடுமையாக விமர்சித்த அவர், பலவந்தமான லாக்டவுன்களை "அறிவியல் என்ற பெயரில் நடத்தப்பட்ட சமூகக் கட்டுப்பாட்டு பரிசோதனை" எனக் கூறி, உலக சுகாதார அமைப்பிலிருந்து அர்ஜென்டினா வெளியேறியதை நியாயப்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com