

ப்ளைதுபாய் விமானத்தை கடத்தி பயங்கரவாத செயலில் ஈடுபட இருந்த ஓமன் விமானி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முன்வருமாறு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு ஓமன் விமானிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 180 பயணிகளுடன் போயிங் 737 மேக்ஸ் விமானம் கடந்த செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.
அப்போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, ஓமன் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார்.
இதையடுத்து கத்திக் குத்து வாங்கிய இந்திய விமானி துணிச்சலுடன் போராடி, ஓமன் துணை விமானியை கைது செய்ய விமான ஊழியர்களுக்கு உதவினார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் ஓமன் துணை விமானி ஹம்மாமியின் செயல்களை அல்-கொய்தாவின் ஏமன் தலைமையக கிளை (AQAP) பாராட்டியுள்ளது.
மேலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது, இதேபோன்ற தாக்குதல்களை நடத்த முஸ்லிம் அல்லாதவர்களும் முன்வருமாறு ‘அல்-பயான்’ வார இதழில் அழைப்பு விடுத்துள்ளது.
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பால் தொடங்கப்பட்ட ‘அல்-பயான்’ என்ற வார இதழின் சமீபத்திய பதிப்பு இந்த வாரம் வெளியாகியுள்ளது.
இந்த கட்டுரையில், “கடந்த காலத்தை விட இன்று அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் எதிரிகள் பன்மடங்கு அதிகமாக உள்ளனர்.
கடவுளையோ மறுமையையோ நம்பாத ஒருவரால் ஒரு தாக்குதல் தொடங்கப்படலாம், ஆயினும் அவருடைய செயல்கள் இறுதியில் இஸ்லாத்தின் நலன்களுக்கு சேவை செய்யும்” என்று அரபிய மொழியில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டுரையில், “போர் இன்னும் முடிவடையவில்லை; சியோனிஸ்டுகள், அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக போரிடும் பல்வேறு இறை மறுப்பு குழுக்களின் படைகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இன்னும் வானில் வட்டமிடுகின்றன.
செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் நிரூபிக்கப்பட்டதை போல, அவை தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் தொடர்ந்து இருக்கின்றன,” என்றும் அந்த கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தா பயன்படுத்திய விமானங்களின் புகைப்படங்களும், தற்போது ஓமன் விமானியால் கடத்தப்படவிருந்த ப்ளைதுபாய் விமானத்தின் புகைப்படங்களும் தற்போது வெளிவந்துள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.