

பிரான்சில் இந்த வார இறுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது
பிரான்சில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள குறைகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
தலைநகர் பாரிஸ் உட்பட பிரான்சின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன.
கடைகள், வணிக வளாகங்களை சூறையாடி சில போராட்டக்காரர்கள் பொருட்களை திருடியும் வருகின்றனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வார வன்முறைக்கு பின் சிறிது அமைதி திரும்பிய நிலையில் இந்த வார இறுதியில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
நேற்று தலைநகர் பாரிஸில் பேரணி அமைதியாகத் தொடங்கியது. பிரான்ஸ் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு, அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து போராட்டக்காரர்களை விலக்கி வைக்கும் வகையில், பாரிஸில் பேரணியை நகரின் தென்கிழக்கு எல்லைக்குள் காவல்துறையினர் மட்டுப்படுத்தியிருந்தனர்.
ஆனால், அதன் இறுதிப் புள்ளியான போர்ட் டி வின்சென்னஸுக்கு அருகில், சில போராட்டக்காரர்கள் எறிபொருட்களை வீச, காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, நீர் பீரங்கிகளை பயன்படுத்தி மக்களைக் கலைத்தனர்.
பிரான்சின் மற்ற பகுதிகளான மார்சே, லியோன், கிளெர்மாண்ட் பெர்ராண்ட் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் ஆகிய இடங்களில் காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், நைஸ் மற்றும் நான்டெஸ் ஆகிய இடங்களில் நீர் பீரங்கிகளையும் பயன்படுத்தினர்.
நாடு முழுவதும் 410,000 பேர் போராட்டங்களில் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக 64 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 40 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வன்முறையில் ஈடுபடுவோரால் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரின் போராட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.
போராடுவோர் எல்லாம் வெளிநாட்டு குடியேறிகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். பாரிஸ் விரைவில் இஸ்லாமிய நகரமாக மாறும் என அவர் கூறினார்.
ஆனால் தங்கள் நாட்டு அரசியலில் ஆதாயத்திற்காக வெளிநாட்டு தலைவர்கள் பொய் சொல்லி வருவதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனிடையே பிரான்சில் களத்தில் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக போராடும் மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
27 வயதான கமிலா செஸ்னியர், பொறியியல் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்தபோதிலும் தன்னால் வேலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.
"என்னைப் போன்றே சலுகை இல்லாத சூழ்நிலையில், தெருக்களிலும் ஆக்கிரமிப்பு வீடுகளிலும் வாழ வேண்டிய கட்டாயத்தில் ஏராளமான மக்கள் உள்ளனர். வெளிப்படையாக சொல்வதானால், அது மிகவும் கடினமானது" என்று அவர் கூறினார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கான வசதிகள், ஆசிரியர்களுக்கான முறையான ஊதியம், ஓய்வூதிய பலன்கள் இன்மையால் இந்த போராட்டங்களில் மாணவர்களும் ஆசிரியர்களுமே ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர்.
பாரிஸில், 46 வயதான ஆசிரியை பெனடிக்ட் பிட்டியன், தனது 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவியான மகள் கரன்ஸுடன் மழையில் பேரணியில் பங்கேற்றார்.
இருவரும் ஆரம்பத்திலிருந்தே இந்த போராட்டத்தை ஆதரித்து வந்தனர்.
"போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களின் குரல் கேட்கப்படவில்லை, ஒரு பெற்றோராகவும் ஆசிரியராகவும் நான் அவர்களுக்குத் துணை நிற்கிறேன்" என்று பிட்டியன் கூறினார்.
கடந்த வார இறுதியில் நடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்த பிறகு தனக்கு பயமாக இருந்தது என்று கூறிய கரன்ஸ், கலந்துகொள்ளாமல் இருப்பது அரசாங்கத்திற்கு வெற்றியை தந்துவிடும் என்பதால் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.
மேக்ரான், 2017ல் பதவியேற்றதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.
தனது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இந்த நெருக்கடியை அவர் எதிர்கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் கட்சிக்கு இது பின்னடைவை தரும் என கருதப்படுகிறது.