

சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாள் அரசுமுறை பயண மாக அமெரிக்காவுக்கு இன்று சென்றடைந்தார். அவர் பயணித்த விமானம், தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் தரையிறங்கியது. அங்கு ஜின்பிங்குக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப், விமான தளத்துக்கு சென்று நேரில் வரவேற்றார்.
1962-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை அமெரிக்க அதிபர் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றது இதுவே முதல் முறையாகும்.
விமானத்தில் இருந்து இறங்கிய ஜின்பிங், அவரது மனைவி பெங்லியுவான் ஆகியோரை டிரம்ப், அவரது மனைவி மெலானியா வரவேற்றனர். இந்த உயர்மட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 100 அடி நீளமுள்ள சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பீரங்கி அணிவகுப்பு மரியாதை, 21 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு, அமெரிக்கா-சீனக் கொடிகளை ஏந்திய குழு, ஒவ்வொரு ராணுவ பிரிவில் இருந்து படைப்பிரிவுகள் ஆகியவை இடம்பெற்றன.
மேலும் அமெரிக்க விமானப்படை இசைக்குழுவின் இசை முழக்கம் மற்றும் அமெரிக்க, சீனத் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன. வரவேற்பின் ஒரு பகுதியாக 2 பி-1 ரக குண்டுவீச்சு விமானங்களும் அங்கு பறந்தன.
ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் விதமாக 6 எப்-22 போர் விமா னங்களும் 6 எப்-16 விமானங்களும் ஓடுபாதையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.
கடந்த மே மாதம் டிரம்ப் சீனாவுக்கு சென்றிருந்த போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று ஜின்பிங்குக்கு அமெரிக்கா பிரமாண்ட வரவேற்பை அளித்தது. பொதுவாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு தலைவரை வெள்ளை மாளிகையில் அதிபர் வரவேற்பார்.
தற்போது ஜின்பிங்கை விமான தளத்துக்கு நேரில் சென்று அதிபர் டிரம்ப் வரவேற்றது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அதேபோல் டிரம்ப், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதற்கிடையே இன்று வெள்ளை மாளிகையில் ஜின்பிங்குக் அதிகாரப்பூர்வ வரவேற்பு, அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது.
அதன்பின் இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் வர்த்தகம், இறக்குமதி வரிகள், தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ராணுவ உறவுகள், தைவான் விவகாரம், ஈரான் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
பின்னர் ஜின்பிங் மற்றும் சீன குழுவினருக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
இதில் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை ஜின்பிங், அவரது மனைவிபெங் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் குடும்பத்தினருடன் ஒரு தனிப்பட்ட தேநீர் விருந்தில் கலந்துகொள்கிறார்கள்.
அதன் பிறகு, வாஷிங்டனில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்திற்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
அமெரிக்கா - சீனா இடையே வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு உள்ளன. இந்த நிலையில் 2 வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கிடைேய அமெரிக்காவுக்கு சென்றடைந்த ஜின்பிங் கூறும்போது, சீனாவும் அமெரிக்காவும் சிறந்த நாடுகள். இரு நாட்டு மக்களும் சிறந்த மக்களாக உள்ளனர்.
சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக அல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். புதிய சகாப்தத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சரியான வழியைக் கண்டறிய வேண்டும் என்றார்.