

அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதரகள் ரஷியா சென்றுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயற்சிப்பது தங்களது எல்லைப் பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி அந்நாடு மீது கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது.
5வது ஆண்டாக போர் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷியாவுக்கு சீனா, வடகொரிய நாடுகளும் ஆதரவு வழங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அமெரிக்க அதிபரான டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இருப்பினும் போர் முடிந்தபாடில்லை. இரு நாடுகளும் பரஸ்பரம் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷியா சரமாரி தாக்குதலை தொடுத்து வந்தது.
இதனிடையே உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் புதிய முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப்மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றடைந்துள்ளனர்.
அவர்களை ரஷிய அதிபரின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் நேற்று வரவேற்றார்.
தொடர்ந்து, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் புதின், விட்காப் மற்றும் குஷ்னர் ஆகியோரை சந்தித்துப் பேசி உள்ளார்.
அமெரிக்கக் குழுவின் இந்த வருகையை முன்னிட்டு, உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை சனிக்கிழமை இரவு முதல் 3 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று அன்று ரஷிய வான்வெளியில் உக்ரைனுக்கு சொந்தமான 53 டிரோன்களைகண்டறிந்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் வலுவான புதிய திட்டம் ஒன்று உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.
மாஸ்கோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதர்கள் இருவரும் இன்று உக்ரைன் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாகப் போருக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உக்ரைன் உரிமை கோரும் 4 பிராந்தியங்களின் முழுப் நிலப்பரப்பையும் ரஷியாவிடம் ஒப்படைக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான திட்டத்தை உக்ரைன் முற்றிலும் கைவிட வேண்டும் என்பதே ரஷியாவின் நிபந்தனையாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கடைசி அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியால் மோதல் முற்றிய நிலையில் தற்போதைய அமெரிக்க தூதர்களின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.