

ரஷியா மீது உக்ரைன் 900 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாடு மீது போர் தொடுத்தது. இந்த போர் இதுநாள்வரை முடிவின்றி தொடர்ந்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்த போரில் இரு நாடுகளும் ஆளில்லா டிரோன்களை அதிகம் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ரஷிய பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் அராவ் கடல் ஆகியவற்றின் மீது உக்ரேனிய ராணுவம் 900க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அவை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"திங்கள்கிழமை மாலைக்கும் செவ்வாய்க்கிழமை காலைக்கும் இடையில் 600-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மாஸ்கோவின் மேல் பறந்தன.
அவற்றில் பெரும்பாலானவை தொலைவிலிருந்து அழிக்கப்பட்டன. மாஸ்கோவை நெருங்கிக் கொண்டிருந்த 105 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன" என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.
மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஒரு முக்கிய எரிபொருள் கிடங்கில் டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், ரஷியா ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக தனக்கு உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக கூறிய அவர் அதற்குப் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.