ரஷியாவின் பிரபல கார்ட்டூன் தொடரான ‘மாஷா அண்ட் தி பியர்’ தொடருக்கு உக்ரைன் அரசு தடை!

கார்ட்டூனைத் தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.
Masha and the Bear
Published on

ரஷியாவுடன் தொடர் ராணுவ மோதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் அரசு, தற்போது ரஷியாவின் உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான அனிமேஷன் தொடரான 'மாஷா அண்ட் தி பியர்' மீது அதிகாரப்பூர்வமாக தடையையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் கலாச்சார அமைச்சரின் அதிரடி உத்தரவு

இது தொடர்பாக உக்ரைன் கலாச்சார அமைச்சர் டெட்டியானா பெரெஷ்னா தனது சமூக ஊடகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், "'மாஷா அண்ட் தி பியர்' அனிமேஷன் தொடரை தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் ரஷிய நிறுவனங்களுக்கு எதிராக உக்ரைன் தடைகளை விதித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்த கார்ட்டூன் தொடரை தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' ஸ்டுடியோ மற்றும் அதன் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

தடைக்கான முக்கிய காரணங்கள்

இந்த கார்ட்டூன் தொடர் குழந்தைகள் மத்தியில் தந்திரமான முறையில் ரஷியாவிற்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.

ரஷியாவின் இத்தகைய மறைமுகப் பிரச்சாரங்கள் உக்ரைனின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கார்ட்டூனில் சோவியத் யூனியன் காலத்து சின்னங்கள் மற்றும் ரஷிய ராணுவப் பாணியிலான தொப்பிகள் போன்ற கூறுகள் நேர்மறையாகக் காட்டப்படுவதாக உக்ரைனின் நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளும் ஏற்கனவே விமர்சித்துள்ளன.

"ரஷியாவின் இத்தகைய நச்சுப் பிரச்சாரங்களுக்கு குழந்தைகளின் திரைகளில் இடமில்லை - உக்ரைனிலும் சரி, உலக அளவில் எங்குமே சரி" என்று கலாச்சார அமைச்சர் பெரெஷ்னா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

உக்ரைனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இந்த அதிகாரப்பூர்வத் தடை மூலம் உக்ரைன் நாட்டில் இந்த கார்ட்டூன் ஒளிபரப்பாவது முற்றிலும் தடுக்கப்படும். மேலும், யூடியூப் உள்ளிட்ட சர்வதேச இணையத் தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த கார்ட்டூன் மூலம் தயாரிப்பு நிறுவனம் பெறும் வருவாயை முடக்கவும், அதன் விநியோகத்தை உலகளவில் கட்டுப்படுத்தவும் உக்ரைன் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் மறுப்பு

கார்ட்டூனைத் தயாரிக்கும் 'அனிமக்கார்ட்' நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது.

தாங்கள் ரஷிய அரசிடம் இருந்து எந்தவொரு நிதியுதவியும் பெறுவதில்லை என்றும், முற்றிலும் சுதந்திரமாகச் செயல்படும் ஒரு கலை நிறுவனம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உக்ரைனின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கேலி செய்துள்ளார். "உக்ரைன் தற்போது கார்ட்டூன்களுக்கு எதிராகவும் போரைத் தொடங்கியுள்ளது.

இது கீவ் ஆட்சியாளர்களின் விகாரமான, அசிங்கமான முகத்தையே காட்டுகிறது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

கார்ட்டூனின் உலகளாவிய ஆதிக்கம்

'மாஷா அண்ட் தி பியர்' கார்ட்டூன் உலக அளவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக இதன் யூடியூப் வீடியோக்கள் மட்டும் உலகளவில் 3,700 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com