

ஐக்கிய அரபு அமீரகம் 'ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது' என எச்சரித்து, மக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்நாட்டின் தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA), தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டை குறிவைக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை தாக்கும் ஏவுகணை அச்சுறுத்தலை கண்டறிந்துள்ளன. தயவுசெய்து பாதுகாப்பான இடத்தில் இருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளை பின்பற்றுங்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் சண்டைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாள் கழித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், "தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"தற்போதைய சூழ்நிலை மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்கள் காரணமாக, உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் தஞ்சம் அடையுங்கள்," என உள்துறை அமைச்சகம் தொலைபேசி வாயிலாக விடுத்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது, அது சிறிது நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டது.
ஈரானில் இருந்து தங்களை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை கண்டறிந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று எல்லைக்குட்பட்ட கடல் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அதற்கு வெளியே விழுந்ததாகவும் கூறியது. மேலம், எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியது.
ஒரு நாள் முன்னதாக, ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை தெரிவித்தது.