

தைவான் நாட்டின் வடக்கு பகுதியை இந்த வார இறுதியில் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் 'சவுடெல்' சூறாவளி புயல் காரணமாக, நாட்டின் தென் பிராந்தியங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தைவானின் மத்திய வானிலை நிர்வாகத்தின் கணிப்புப்படி, 'சவுடெல்' புயல் தற்போது ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினாவா பிராந்தியத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த புயல் தைவானின் வடக்கு பகுதியைக் கடந்து, சீனாவின் கிழக்குக் கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தைவானின் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகப் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தைவான் ரெயில்வே சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய கிழக்குக் கரைப் பகுதிகள் மற்றும் கவ்ஷியுங், தைதுங் இடையேயான விரைவு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் கவ்ஷியுங் மற்றும் தைனான் ஆகிய நகரங்களில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பிங்டுங், சியாயி, தைதுங் மற்றும் ஹுவாலியன் ஆகிய மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் கவ்ஷியுங் நகரில் மட்டும் சுமார் 1.3 மீட்டர் (4.3 அடி) வரை மழை பதிவாகக்கூடும் என்று உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. இது அந்த நகரம் ஒரு முழு ஆண்டில் பெறும் சராசரி மழைப்பொழிவில் பாதியாகும். இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
'சவுடெல்' புயல் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியை அடையும் போது மேலும் தீவிரமடைந்து சூப்பர் புயலாக மாற வாய்ப்புள்ளதாக பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான குவாங்சியில் 'நர்ரா' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.