

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் வழியாக பயணம் செய்யும் வர்த்தக கப்பல்கள் மீது, ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையானது பெருமளவில் உயர்ந்து வருகிறது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அமெரிக்காவில் கடுமையாக உயர்ந்தது. இந்த விலைவாசி உயர்வானது டிரம்ப் நிர்வாகத்தின் மீது, அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று ஈரானில் உள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் ஈரானில் அமைந்துள்ள அணு உலை மீது, அமெரிக்கா தனது அடுத்தகட்ட தாக்குதலை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் குறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போரை மீண்டும் தொடங்குவதா வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
ஈரான் அணுசக்தி திட்டம் நிரந்தரமாக சிதைக்கப்படுவதயும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதையும் உறுதிசெய்ய, அமெரிக்கா தனது தாக்குதல்களை தொடங்க வேண்டுமா எனவும் டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் மற்ற பகுதிகளை நான் அழிக்க விரும்புவதில்லை, ஆனால் ஒருவேளை நான் அதை செய்ய வேண்டியிருக்கும் எனவும் டிரம்ப் சூசகமாக கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு அயோடின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணுசக்தி மீதான தாக்குதலின் போது, கதிரியக்க அயோடினை தைராய்டு சுரப்பி உறிஞ்சுவதில் இருந்து பாதுகாக்க அயோடின் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து ஈரான் சுகாதார துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் அயோடினை விநியோகித்து வருகிறோம். டிரம்பை இனி நம்ப முடியாது. அவர் இந்த குற்றத்தை செய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ராணுவ பதற்றம் அதிகரிக்கும்போது, அணுசக்தி நிலையங்களில் இருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு ஈரான் வழக்கமாக இந்த தடுப்பு மருந்தை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.