அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஆதரவு; கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஈரான், கியூபா பிரதிநிதிகள்

உக்ரைனில் மனித உயிர்கள் பலியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
Trump
Published on
Summary

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய நடத்தப்பட்ட நள்ளிரவு சோதனையைத் தனது நிர்வாகத்தின் சாதனையாக டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் மற்றும் வெனிசுலாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துத் தனது அரசின் நிலைப்பாட்டைத் நியாயப்படுத்தி பேசினார். சர்வதேச அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உலக நாடுகளின் தற்போதைய அணுகுமுறை போதுமானதாக இல்லை என்று சாடிய அவர், அமெரிக்காவின் ராணுவ வலிமையைப் பயன்படுத்தி உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்து வருவதாக தெரிவித்தார்.

ஈரான் மீதான போர் எச்சரிக்கை

ஈரான் உடனான மோதல் மற்றும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய டிரம்ப், அந்நாடு அணுஆயுத வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். ஈரான் அரசு தனது அணுஆயுதத் திட்டங்களைக் கைவிட்டு, அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் அல்லது மிகக் கடுமையான ராணுவ அழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். டிரம்ப் ஈரான் குறித்து காரசாரமாக பேசத் தொடங்கியதும், ஐ.நா. பொதுச்சபையில் இருந்த ஈரானிய பிரதிநிதிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மெரிக்க கொள்கைகள்

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய நடத்தப்பட்ட நள்ளிரவு சோதனையைத் தனது நிர்வாகத்தின் சாதனையாக டிரம்ப் சுட்டிக்காட்டினார். அத்துடன், கரீபியன் மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் சந்தேகத்திற்குரிய படகுகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களையும் அவர் நியாயப்படுத்திப் பேசினார். வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸைப் பாராட்டிய டிரம்ப், கியூபாவில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு

மெக்சிகோ நாடு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் (கார்ட்டெல்கள்) முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக சாடிய டிரம்ப், அத்தகைய நிலையிலிருக்கும் ஒரு நாட்டுடன் எல்லைப் பகுதியைப் பகிர்வது அமெரிக்க பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டார். எல்லை பாதுகாப்பை உறுதிசெய்யவும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் அமெரிக்கா மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

க்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர இருநாட்டுத் தலைவர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக கூறிய டிரம்ப், "உக்ரைனில் மனித உயிர்கள் பலியாவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். பொதுச் சபை உரையைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையொப்பமிட்டார். இதன்கீழ் அங்கு இரு முக்கிய ராணுவ முகாம்களை அமெரிக்கா அமைக்கவுள்ளது.

சர்வதேச கூட்டணிகள்

செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என்றும், தேசிய இறையாண்மையே முதன்மையானது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவுகள் சர்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் நட்பு நாடுகளிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com