

மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பும் முடிவில் இருந்து அமெரிக்க அரசு பின்வாங்கியுள்ளது.
அமெரிக்காவில் ஃபோர்ட் ஹூட் தளத்தில் கடந்த 2009 நவம்பர் 5 அன்று 13 ராணுவ வீரர்களை மனநல மருத்துவராக பணிபுரிந்து வரும் ராணுவ மேஜர் நிஜாஸ் மாலிக் ஹசன் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இந்த தாக்குதலில் மேலும் 32 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் ராணுவ தளத்தில் நடந்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ராணுவ மேஜர், ராணுவ நடுவர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் ராணுவ மருத்துவர் துப்பாக்கி சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் அமெரிக்க படைகளில் இருந்து தலிபான் போராளிகளையும் மற்ற இஸ்லாமியர்களையும் பாதுகாக்கும் நோக்கில், இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறினார்.
இதையடுத்து 2013-ஆம் ஆண்டு ராணுவ நடுவர் நீதிமன்றம் மருத்துவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது.
அமெரிக்க சிறையில் கைதியாக இருந்து வரும் மருத்துவருக்கு வரும் டிசம்பர் 3-ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஃபோர்ட் ஹூடில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான அனுமதியை அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து அக்டோபர் 2ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை டிரம்ப் அளித்தார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவ மேஜரின் மரண தண்டனை பொது வெளியில் நிறைவேற்றப்பட்டு, நேரலையில் ஒளிபரப்பபடும் என பீட் ஹெக்ஸெத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹெக்ஸெத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மக்கள் இதை பார்க்கும் வகையில் பொதுவெளியில் ஒளிபரப்பப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். ஏனென்றால் இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான விளைவுகள் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஹசன் கொடூரமான துப்பாக்கி சூட்டை நடத்திய இடம் ஃபோர்ட் ஹூட் என்பதால், அங்கேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் படையை அமைத்து, வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்.
ராணுவ மேஜர் தன் நாட்டைக் காட்டி கொடுத்து, தீவிர இஸ்லாமியவாதியாக ஃபோர்ட் ஹூடில் ஏராளமான அமெரிக்கர்களை சுட்டு கொன்றார். நிச்சயமாக மரண தண்டனையை நாங்கள் ஃபோர்ட் ஹூடில்தான் நிறைவேற்றுவோம்,” என்று ஹெக்ஸெத் கூறினார்.
இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது 1961க்கு பிறகு அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக இருக்கும் என கூறப்பட்டது.
மேலும் 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ராணுவ துப்பாக்கி சுடும் படையால் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாகவும் இந்த சம்பவம் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மரண தண்டனையை நேரில் ஒளிபரப்புவது மனிதாபிமானமற்ற செயல் என அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐநா மனித உரிமைகள் அமைப்பும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்தும் டிரம்ப்பின் குடியரசு கட்சியில் இருந்துமே எதிர்ப்பு கிளம்பியது.
குடியரசுக் கட்சி செனட்டர் தாம் டில்லிஸ் இதை வெறுக்கத்தக்கதுக்கும் அப்பாற்பட்டது என்று கூறி, பொது மரணதண்டனைகள் அமெரிக்காவுடன் தொடர்புடையவை அல்ல, மாறாக அடக்குமுறை ஆட்சிகளுடன் தொடர்புடையவை என்று விமர்சித்தார்.
ஓய்வுபெற்ற எழுபத்திரண்டு இராணுவ அதிகாரிகளும், அந்த நேரலை ராணுவம் மற்றும் நாட்டின் கௌரவத்தை களங்கப்படுத்தும் என்று கூறி, அதனை நிறுத்துமாறு டிரம்ப்பிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது முடிவில் இருந்து டிரம்ப் அரசு பின்வாங்கியுள்ளது.
அவரது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப், திட்டமிட்டபடி டிசம்பர் 3 அன்று ஹசன் துப்பாக்கிச் சுடும் படையால் கொல்லப்படுவார், ஆனால் அந்த நிகழ்வு பொதுவெளியில் நேரலையாக ஒளிபரப்பப்படாது என்று டிரம்ப் கூறினார்.
மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் விரும்பினால், மரண தண்டனையை நேரில் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.