

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.
லாஸ் ஏஞ்சலஸின் சேட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வட மேசன் அவென்யூ அருகில், ஒரு சொகுசு கார் பயணிகள் பயணித்த மெட்ரோ பேருந்து மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர விபத்து காட்சிகளையும் மீட்புப் பணிகளையும் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்காக ஊடகங்களின் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தன.
அப்போது NBC4 மற்றும் டெலிமுண்டோ 52 தொலைக்காட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான 'செய்தி ஹெலிகாப்டர்', வழக்கமான முறையில் மேலிருந்து விபத்துக் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாகத் தரையை நோக்கி சரியத் தொடங்கியது. வர்த்தகக் கட்டடங்களுக்கு இடையே இருந்த கொள்கலன்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி, ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்த ஒருவர் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்து போனதால், விபத்துக்குள்ளான நபர்களின் விவரங்களை அடையாளம் காணும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து ஏற்படுவதற்குச் சில நொடிகளுக்கு முன்பு, ஹெலிகாப்டரின் என்ஜின் சத்தம் மாறியதும், 'மேலே தூக்குங்கள்' எனக் குரல் எழுப்பிய அதிர்ச்சி தரும் ஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அமெரிக்க நாட்டின் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. என்ஜின் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரு பெரும் விபத்துகள் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.