ஈரானில் பயங்கரம்: நடுவானில் அதிர்ந்த விமானம், சரிந்து விழுந்த கூரை பாகங்கள்- பயணிகள் கதறல்!

விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது.
Sepehran Airlines
Published on
Summary

விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது.

ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம், டேக்-ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

டயர் கழன்று எஞ்சின் சேதம்

மாலை சுமார் 5:39 மணியளவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் லேண்டிங் கியரில் இருந்த சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.

சரிந்து விழுந்த கேபின் கூரை பாகங்கள்

விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உறை உடைந்து சரிந்தது. இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை என செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ஹசன் ஜாஃபரி தெரிவித்துள்ளார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து மஷாத் விமான நிலையத்தின் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பின் மீண்டும் திறக்கப்பட்டது. டயர் கழன்றதுதான் என்ஜின் சேதத்திற்கும் கடும் அதிர்வுக்கும் காரணமா, கூரை பாகங்கள் எவ்வாறு தனியாகக் கழன்று விழுந்தன என்பது குறித்து ஈரான் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com