

ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள-அமெரிக்க நண்பர் ஓடும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நியூயார்க் நகரின் லோயர் மேன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ப்ரிங் ஸ்ட்ரீட் சப்வே ரெயில் நிலையத்தில் நள்ளிரவு சுமார் 3:15 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. நியூஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த மாளவிகா சித்ரே(24) மற்றும் அவரது நண்பரான நவம் கவுல் (24) ஆகிய இருவரும் சப்வே ரெயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நேரத்தில் வந்த தெற்கு நோக்கிய 'நம்பர் 4' ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. ஓட்டுநர் உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்திய போதிலும், ரெயிலை நிறுத்த முடியாமல் இருவர் மீதும் மோதியதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
ரெயில் மோதிய சில வினாடிகளுக்கு முன்பாக இருவரும் தண்டவாளத்தில் மிகவும் அமைதியாக அமர்ந்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாளவிகா சித்ரே சிரித்துக் கொண்டே நவம் கவுலை தன் பக்கம் இழுப்பது போல் இருந்ததாக ரெயில் ஓட்டுநர் தனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ரெயில் மோதிய வேகத்தில் இருவரும் ரெயிலின் கீழ் பகுதியிலேயே சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அவசர உதவிக்குழுவினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். ரெயிலில் பயணம் செய்த சுமார் 100 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பலியான இருவருமே நியூஜெர்சியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் 2024-ஆம் ஆண்டு ஒன்றாகப் படித்து பட்டம் பெற்ற நண்பர்கள் ஆவர். மாளவிகா சித்ரே மருந்து நிறுவனப் பணியிலும், நவம் கவுல் நிதித் துறை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். இருவரும் தவறி தண்டவாளத்தில் விழுந்தனரா அல்லது திட்டமிட்டு இறங்கினரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் போதைப்பொருளின் தாக்கத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனரா என்ற கோணத்திலும் நியூயார்க் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலைக்கான கடிதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.