அமெரிக்காவில் சோகம்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்து- மணமகன் பரிதாப பலி

இரவு நேரத்தில் பயணம் புறப்பட்டபோது அப்பகுதியில் பலத்த மழையும், அடர்ந்த மூடுபனியும் நிலவியுள்ளது.
wedding tragedy
Published on
Summary

விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்ட புதிதாக திருமணமான தம்பதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மணமகன் மற்றும் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சோகத்தில் முடிந்த திருமணம்

அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த விழாவின் இறுதியில், புதுமணத் தம்பதியினரை சிறப்பு வழியனுப்பும் விதமாக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மோசமான வானிலை

இரவு நேரத்தில் பயணம் புறப்பட்டபோது அப்பகுதியில் பலத்த மழையும், அடர்ந்த மூடுபனியும் நிலவியுள்ளது. வணிக ரீதியிலான விமானியாகப் பணியாற்றி வந்த மணமகன் டேவ் ஃபிஜி, வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் பயணத்தைத் தவிர்க்கலாம் எனக் கூறியபோதிலும், ஹெலிகாப்டர் விமானி பயணத்தைத் தொடர முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து மரங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

கணவரின் உடலில் கீழ் சிக்கிய மணமகள்

இந்த விபத்தில் மணமகன் டேவ் ஃபிஜி மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய நிகில் நர்குண்டகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வர தாமதமானதால், படுகாயமடைந்த மணமகள் ஜென்சி, உயிரிழந்த தனது கணவரின் உடலுக்கு அடியில் சுமார் 6 மணி நேரம் நசுங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு பதிவு

மோசமான வானிலையை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக ஹெலிகாப்டரை இயக்கியதே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறி, சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் திருமண மண்டப நிர்வாகத்தின் மீது மணமகள் ஜென்சி தற்போது நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். மகிழ்ச்சியாகத் தொடங்க வேண்டிய ஒரு திருமணம், சில மணி நேரங்களிலேயே பேரவலமாக முடிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com