

நேபாள எல்லையை ஒட்டிய திபெத் பிராந்தியத்தில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே, அப்பகுதியில் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திபெத் தன்னாட்சிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் வடு மாறுவதற்குள், அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, இன்று பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத் மலைப்பகுதியில் பெரும் பனிப்பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட மெகா வெள்ளப்பெருக்கு, ஆற்றோர நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளைத் தரைமட்டமாக்கியது. வெள்ளத்தின் வீரியத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மீட்புக் குழுவினருக்குப் கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதிக்கான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் எல்லைப்புற கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.