மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்!

21 இந்திய ஊழியர்களும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வர்த்தக கப்பல்கள்
வர்த்தக கப்பல்கள்
Published on
Summary

மத்திய கிழக்கில் இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்க போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய ஊழியர்களுடன் பயணித்த 3 வெளிநாட்டு வர்த்தகக் கப்பல்கள் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

நல்வாய்ப்பாக இத்தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் அனைவரும் காயமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல்கள்

கடல்சார் நிர்வாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த 'ரீஸ்கோ' என்ற கச்சா எண்ணெய் கப்பல், செப்டம்பர் 8 அன்று இரவு 11 மணியளவில் ஓமன் வளைகுடாப் பகுதியில் அமெரிக்கக் கடற்படையினரால் தாக்கப்பட்டது.

இக்கப்பலில் பயணித்த 21 இந்திய ஊழியர்களும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, ஈரானியத் துறைமுகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாக்குதலுக்கு உள்ளான மற்ற இரு வெளிநாட்டுக் கப்பல்களிலும் இருந்த இந்திய ஊழியர்கள் அனைவரும் எவ்விதக் காயமுமின்றி மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்தியக் கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்தியாவை நோக்கி வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் என மொத்தம் 10 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் உள்ள மாலுமிகளை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை இந்தியக் கொடி பொருந்திய 4 கப்பல்களும், இந்திய ஊழியர்கள் பயணித்த 50 கப்பல்களும் இத்தகைய தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளன.

பிரதமர் மோடி - ஈரான் அதிபர்

இதனிடையே டெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், வளைகுடாப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

இச்சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்ததில் மகிழ்ச்சி. இது அவரது முதல் இந்திய வருகை என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com