ஹைலேண்டர்ஸ் ஸ்கல்.. மிரள வைக்கும் 600 வருட சாபம் - ஸ்காட்லாந்தின் மண்டை ஓட்டு மர்மம்!

சேமிப்பு அறையில் இருந்த பெட்டிக்குள் இருந்து இந்த மண்டை ஓட்டையும், அதனுடன் எழுதப்பட்ட ஒரு பழைய கடிதத்தையும் கண்டுபிடித்தார்.
ஹைலேண்டர்ஸ் ஸ்கல்
ஹைலேண்டர்ஸ் ஸ்கல்
Published on
Summary

ஸ்காட்லாந்து நாட்டின் 600 ஆண்டு பழமையான மண்டை ஓடு ஒன்றின் கதை மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் மலைப்பிரதேசங்கள் ஹைலேண்ட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு வாழ்பவர்கள் தொன்றுதொட்டு ஹைலேண்டர்ஸ் என அழைக்கப்படுகின்றனர்.

இந்த ஹைலேண்ட்களில் பல பழங்குடியின வம்சங்கள் பல காலமாக வாழ்கின்றன. அதில் புகழ் பெற்ற வம்சம் 'கிராண்ட்' (Grant). இந்த வம்சத்தினரால் 600 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டை ஓடு ஒன்று பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

இந்த மண்டை ஓடு Highlander's skull என அழைக்கப்படுகிறது. இதைச் சுற்றி ஒரு வரலாற்று கதை உள்ளது.

கதை

600 ஆண்டுகள் பழமையான இந்தக் கதையின்படி, 14ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் பரூகி (Freuchie) கோட்டை மற்றும் அதனையொட்டிய பகுதிகளை கைப்பற்ற கிராண்ட், மேக்ரிகோர், கோமின் ஆகிய மூன்று பழங்குடியின வம்சத்தினரிடையே போர் நடைபபெற்றது.

போரில் கிராண்ட் வம்சத்தினர் வென்றனர். இதனால் இந்த கோட்டை தற்போது கேஸ்ட்டில் கிராண்ட் என அழைக்கப்படுகிறது.

இந்தப் போரில் கொல்லப்பட்ட கோமின் வம்சத் தலைவரின் மண்டை ஓடு, கிராண்ட் வம்சத்தினரால் ஒரு நினைவுப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டது.

சாபம்

இந்த மண்டை ஓடு கிராண்ட் வம்சத்தினரின் கையை விட்டு போனால், அவர்களின் சாம்ராஜ்யமும் செல்வாக்கும் அழியும் என்ற சாபம் இருப்பதாக கிராண்ட் வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக நம்பி வந்தனர்.

1983இல் கிராண்ட் வம்ச குடும்பத்தினர் தங்கள் கோட்டையை விற்ற பிறகு, இந்த மண்டை ஓடு காணாமல் போனதாகக் கருதப்பட்டது.

ஆனால், கிராண்ட் வம்சாவளியை சேர்ந்த பிரபு 'லார்ட் ரீட்ஹேவன்' என்பவர், தங்கள் குடும்பச் சேமிப்பு அறையில் இருந்த பெட்டிக்குள் இருந்து இந்த மண்டை ஓட்டையும், அதனுடன் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு பழைய கடிதத்தையும் கண்டுபிடித்தார்.

கிரிகோர் ஸ்டூவர்ட் என்ற பாதிரியார் எழுதிய அந்தக் கடிதத்தில், இந்த மண்டை ஓட்டின் வரலாற்றுச் சம்பவங்களும் சாபத்தை பற்றிய விவரங்களும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆய்வு

எடின்பர்க்கில் உள்ள Surgeons Hall அருங்காட்சியகத்தை சேர்ந்த மனித எலும்பியல் நிபுணர் கேட் இர்விங் தலைமையிலான குழுவினர் இந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.

ரேடியோகார்பன் டேட்டிங் மூலம் இது உண்மையில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமின் தலைவரின் மண்டை ஓடு தானா என்பது குறித்துப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

The Legend of the Highland Skull என்ற பெயரில் இன்று (செப்டம்பர் 7) முதல் அக்டோபர் 31 வரை கிராண்ட்டவுன் அருங்காட்சியகம் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com